Ads Area

கருத்தடை மாத்திரை குற்றச்சாட்டை எதிர்கொண்ட வைத்தியர் ஷாபியின் மகள் மாவட்டத்தில் 12வது இடத்தைப் பெற்று வைத்தியத்துறைக்கு தெரிவு.

2019 ஆம் ஆண்டு பெரும் பொய்யான கருத்தடை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வைத்தியர் கலாநிதி ஷாபி ஷிஹாப்தீனின் மகள், 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மருத்துவ பீடத்திற்கான நுழைவைப் பெற்றுள்ளார்.


கருத்தடை சர்ச்சையின் போது வைத்தியர் ஷாபியின் குடும்பம் எதிர்கொண்ட கடுமையான மன அழுத்தத்தால் பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதிலும், வைத்தியர் ஷாபியின் மகள் தனியாக கல்வி கற்று உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.


வைத்தியர் ஷாபியின் மகள் அறிவியல் பாடத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று, மாவட்டத்தில் 12வது இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் 357வது இடத்தினையும் பெற்று மருத்துவபீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.


முன்னதாக, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையிலும் சிறந்து விளங்கிய அவர், 9 சித்திகளைப் பெற்று, மக்களுக்குச் சேவை செய்ய தனது தந்தையைப் போன்று மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.


டாக்டர். ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது மகளின் சாதனை, மகத்தான இன்னல்களை எதிர்கொண்ட அவரது விடாமுயற்சிக்கு சான்றாக நிற்கிறது.


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe