தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பில் இருந்த போது தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா என்ற யானை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படாது என தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிகிச்சைகளுக்காக முத்துராஜா என்ற யானை கடந்த 2023 இல் இலங்கையில் இருந்து தாய்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை முடிவடைந்ததும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
யானை தற்போது பூரண குணமடைந்துள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகமும் கால்நடை வைத்தியருமான சந்தன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, தாய்லாந்து அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மருத்துவக் குழு, யானையின் நிலையை மதிப்பிடுவதற்காக தாய்லாந்துக்கு விஜயம் செய்தது. அப்போது, யானை உடல் நலம் தேறி வருவதாக தாய்லாந்து அதிகாரிகள் குழு இலங்கை குழுவினருக்கு தகவல் அளித்தனர். இருப்பினும், முத்துராஜாவை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அந்நாட்டு மன்னர் முடிவு செய்ததாக தாய்லாந்து அரசு பின்னர் தெரிவித்தது.
சுமார் 12 வருடங்களாக அளுத்கம கந்தே விகாரையின் காவலில் வைக்கப்பட்டிருந்த யானை, சிகிச்சைக்காக தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு மாற்றப்படுவதற்கு முன்னர், கடுமையான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து அரசாங்கம் 200 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜாவின் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்காகவும், சிகிச்சைக்காகவும் செலவிட திட்டமிட்டிருந்தது. முத்துராஜா தாய்லாந்து திரும்பியதைத் தொடர்ந்து, இலங்கைக்கு முன்னர் வழங்கப்பட்ட ஏனைய தாய்லாந்து யானைகள் குறித்து தாய்லாந்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்து ராஜா, முதலில் 2001 இல் தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.