திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கூடுதல் வரதட்சணைக்காக இளம்பெண்ணை பட்டினி போட்டு கொலை செய்த கணவன், மாமியார் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பூயப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லாலி (66). அவரது மனைவி கீதா லாலி (62). அவர்களது மகன் சந்துலால் (36). அவருக்கும், கொல்லம் அருகே உள்ள கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்த துஷாரா (28) என்ற பெண்ணுக்கும் கடந்த 2013ல் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது 25 பவுன் நகைகளும், ரூ. 5 லட்சம் பணமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. ஆனால் திருமணம் ஆன ஒரு சில மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு சந்துலாலும், அவரது பெற்றோரும் துஷாராவை கொடுமைப்படுத்த தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2018ம் ஆண்டு துஷாரா மர்மமான முறையில் இறந்தார். தங்களது மகளின் மரணத்திற்கு கணவன் குடும்பத்தினர் தான் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி துஷாராவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து துஷாராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் துஷாரா பட்டினி போட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இறக்கும்போது அவரது உடல் எடை 21 கிலோ மட்டுமே இருந்தது. அதைத்தொடர்ந்து சந்துலால், அவரது தந்தை லாலி, தாய் கீதா லாலி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கொல்லம் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதற்கிடையே லாலி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷ், குற்றம்சாட்டப்பட்ட சந்துலால் மற்றும் அவரது தாய் கீதா லாலி ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.