நடந்து முடிந்த சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு வட்டாரங்களையும், பிரதேசத்தில் அதிக வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டியதன் பின்னரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் சபையின் ஆட்சியைக் கைப்பற்ற முடியாததால் சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக சுயேட்சை குழுக்கள் இடம் பிடித்துள்ளன.
கடந்த இரண்டு தடவைகள் சம்மாந்துறையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இழந்து காணப்படும் நிலையில், நடந்து முடிந்த பிரதேச சபை தேர்தலில் எந்தக் கட்சிக்கு சம்மாந்துறையில் ஆதிக்கம் அதிகம் என்ற பலத்த போட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிக வாக்குகளால் (ஒன்பது) ஆசனங்களை கைப்பற்றி முதலிடத்தைப் பிடித்த போதிலும் தனித்து ஆட்சி செய்ய முடியாத இக்கட்டான நிலை அங்கு அக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களுடன் தமிழ் அரசுக் கட்சி மற்றும் தேசிய காங்கிரஸ் உட்பட சுயேட்சை குழுக்கள் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்று மொத்தமாக 23 ஆசனங்களுடன் யாருடன் கூட்டுச் சேர்ந்து, எந்தக் கட்சிக்கு தவிசாளரை வழங்குவது என்ற போட்டி தற்போது நிலவுகிறது.
தேசிய அரசியலில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் பல கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்ற போதிலும் உள்ளூர் அரசியலில் கூட்டுச் சேர்வதில் அக்கட்சிகளிடையே தயக்கம் நிலவுவதால் சம்மாந்துறை பிரதேச சபையை ஆட்சி செய்வதற்கு சுயேட்சை குழுக்களின் ஆதரவும், தயவும் தேவையுடைதாகி காணப்படுகிறது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகம் காணப்பட்டாலும், அதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆசனங்கள் கண்டிப்பாக தேவையென்ற நிலையில், மறுபுறத்தில் முஸ்லிம் காங்கிரஸிற்கு இம்முறை எப்படியாயினும் சம்மாந்துறையின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஏலவே வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் சம்மாந்துறை தொகுதிக்கு பெற்றுவிடலாம் என்ற நோக்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சைக் குழுக்களின் தயவில் ஆட்சியமைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் அதற்காக பல விட்டுக் கொடுப்புகளுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில் சம்மாந்துறை தொகுதியில் அதிகம் வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி இம்முறை இரண்டு ஆசனங்களுடன் படுதோல்வியடைந்ததன் விளைவாக யாருடனும் கூட்டாக இணைந்து ஆட்சியமைக்க முன்வராது தனித்து இயங்க தீர்மானித்துள்ள நிலையில், தற்போது இதில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி ஏற்பட்டுள்ளது.
தேசிய அரசியலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்துள்ள போதிலும் சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி இந்த இரண்டு கட்சிகளில் யாருக்கு ஆதரவு என்பதிலேயே தங்கியுள்ளது. மட்டுமல்ல சுயேட்சை குழுக்களின் கோரிக்கைகளை எந்தக் கட்சி நிறைவேற்ற முன் வருகின்றதோ அந்த கட்சிக்கே வாய்ப்பு அதிகம் என்கிற நிலையும் காணப்படுகிறது.
தமிழ் அரசுக் கட்சி மற்றும் தேசிய காங்கிரஸ் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணையாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு 'தவிசாளரை' தருவதாக முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியுள்ள வாக்குறுதிக்கு சம்மதம் அளித்ததன் பிரகாரம் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு ஆதரவளிக்க போவதில்லை என்ற சூழல் அங்கு உருவாகியுள்ளது.
அதுமாத்திரமல்ல சுயேட்சை குழு 1 (மாம்பழம்) முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரான வாக்குகளை சேகரித்து கொடுக்கும் தரகர்களாக ஒரு ஆசனத்துடன் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளது.
மற்றொரு புறத்தில் சுயேட்சை குழு 2 (அண்ணாசி) சில நிபந்தனைகளுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைய வாய்ப்புண்டு என்பதையும் அறிய முடிகிறது.
எது எவ்வாறாயினும் சுயேட்சை குழு 3 (வானொலிப் பெட்டி) தமக்கு 'பிரதி தவிசாளர்' பதவியை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கும் தரப்பினருக்கு மாத்திரமே ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் அவ்வாறு இல்லை எனில் தனித்து இயக்கவுள்ளதாகவும், தவிசாளர் தெரிவின்போது அப்பதவிக்கு போட்டி இடவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
மேலும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களில் ஒருவர் தவிசாளர் தெரிவின்போது அப்பதவிக்கு போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த குழப்பமான சூழலில் இதில் யார் ஆட்சி அமைப்பதென்றாலும் சுயேட்சை குழுக்களின் அல்லது தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு மிகப் பிரதானமானதாகவும், ஓராண்டுக்கு மேலதிகமாக யாராலும் தொடர்ந்து ஆட்சியில் நீடித்து இருக்க முடியாது என்ற கருத்தாடல்களும் அங்கு நிலவுகிறது.
-அஹமட் புர்க்கான் -