Ads Area

சம்மாந்துறைப் பிரதேச சபையில் அமளிதுமளி, ஊடகவியலாளரை வெளியேற்றிய தவிசாளர்.

 பாறுக் ஷிஹான்-சவளக்கடை குறூப் நிருபர்.

 

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச சபை மாதாந்தக்கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர் ஒருவர் தவிசாளரின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.


சம்மாந்துறை பிரதேச சபையின் 5வது சபையின் 2வது கூட்ட அமர்வு செவ்வாய்க்கிழமை (19) தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் நடைபெற்றது.


அதன் போது, இறைவணக்கத்தடன் கடந்த சபையின் கூட்டறிக்கைய சமர்ப்பித்து அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக தவிசாளர் சபையில் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.


இந்நிலையில், சென்ற கூட்டறிக்கையில் தாங்கள் பேசிய  பல விடயங்கள் விடுபட்டுள்ளதாகவும், யார் யார் என்ன கருத்துக்கூறினார்கள் என்ற விடயம் தெளிவாகக்  குறிப்பிடப்படவில்லை எனவும் சபையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.


அதன் போது, தவிசாளர் சென்ற கூட்டறிக்கையில் மெற்கொள்ளப்பட்ட விடயங்கள் குறித்து சபையில் தெளிவாக விளக்கியதுடன், முக்கியமான விடயங்களை மாத்திரமே கூட்டறிக்கையில் உள்வாங்குவதாகவும் குறிப்பிட்டார். இதனிடையெ  சபையில் உறுப்பினர்களிடையே அமளிதுமளி ஏற்பட்டது.


இவ்வாறு சபை உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்கள் நீண்டு செல்லாமல்    இடைநிறுத்திய தவிசாளர் அங்கு விசேட அனுமதி பெற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரை வெளியேற்றுமாறு பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களுக்கு பணித்திருந்தார்.


அதனையடுத்து, கூட்டத்தில் விசேட அனுமதி பெற்று சபையிலிருந்த ஊடகவியலாளர் தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தி இருந்த போதிலும், சபை அமர்வுகளில் இடைநடுவில் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்   வெளியேற்றப்பட்டார்.


மேலும், உள்ளூராட்சி சபைகளின் மாதாந்தக்கூட்டங்களில் ஊடகங்கள் கலந்து கொள்வதற்கு ஏனைய சபைகள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், சம்மாந்தறை பிரதேச சபையில் மாத்திரம் ஊடகங்களுக்கு கட்டுப்பாட்டுடன் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


இருந்த போதிலும், அனுமதி பெற்று சபையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊடகவியலாளரை அங்கிருந்து தவிசாளர் வெளியேற்றிய சம்பவத்தைக்கண்டிப்பதாக தேசிய காங்கிரஸ் கட்சி பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தனது கண்டனத்தை சபையில் குறிப்பிட்டார்.


சம்மாந்துறை பிரதேச சபைத்தவிசாளர் தெரிவின் போது  ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,  சபையில் நடைபெறும் விடயங்கள் மக்கள் மத்தியில் சென்றடைவதைத்தடுக்குமுகமாகவே ஊடகவியலாளரை சபையில் இடைநடுவில் வைத்து அங்கிருந்து வெளியேற்றியுள்ளதாகவும், குறிப்பாக சென்ற கூட்டறிக்கையிலுள்ள குறைப்பாடுகளை உறுப்பினர்கள் தவிசாருக்கு சுட்டிக்காட்டி உரையாற்றும் போது சபையில் அனுமதி பெற்று வந்த ஊடகவியலாளரை அங்கிருந்து அப்புறப்படுத்தியமை தவிசாளர் தனது தவறுகளை வெளியில் தெரியாமல் தடுக்கவே எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe