மட்டக்களப்பில் இன்றைய (18) ஹர்த்தாலானது குழப்பம் நிறைந்த சூழலுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
நிறுவனங்கள் சார்ந்த வியாபார நிலையங்கள் திறந்து காணப்பட்டதுடன், சிறு வியாபார மற்றும் பெரிய வியாபார நிலையங்கள் மூடி கிடந்ததை காண முடிந்தது.
மட்டக்களப்பு நகர் வியாபார நிலையங்களுக்கு முன் குறித்த கடை முதலாளிகள் நிலையத்தை திறப்பதா, இல்லையா என்ற கேள்வியுடன் நின்றதுடன், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினால் ஹர்த்தால் தொடர்பான எந்த அறிவிப்பும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் ஒருவர் இதன் போது தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காலை மட்டக்களப்பு மாநகர மேயர் பிரதான வீதிக்கு சென்று கடைகளை மூடும் படி கூறியதாகவும், அந்த நேரம் அங்கு வந்த அரச தரப்பு குழுவினர் கடைகளை திறக்கும் படி கூறியதாகவும் சற்று நேரத்தில் அங்கு சலசலப்பு ஒன்று ஏற்பட்டு பின்னர் மாநகர மேயர் அந்த இடத்திலிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் மற்றுமொருவர் தெரிவிக்கையில், மாநகர மேயர் சொல்வதை நாங்கள் கெட்கத்தான் வேண்டும் என்றும் இல்லாவிடின் எங்களுடைய கடை அனுமதியை நீக்கிவிட்டால் என்னசெய்வது என்று தமது நிலைப்பாட்டை ஒரு கடை முதலாளி தெரிவித்தார்.
அத்துடன் காத்தான்குடி பகுதியில் வியாபார நிலையங்கள் வழமை போன்று திறக்கப்பட்டுள்ளதுடன், ஏறாவூரில் சிலர் நன்பகல் 12 மணியுடன் கடைகளை மூட தீர்மானித்துள்ளதுடன், சிலர் வியாபார நிலையங்களை காலையே திறந்துள்ளதாகவும் ஏறாவூர் வியாபாரிகள் தெரிவித்ததுடன் செங்கலடி பகுதியிலும் சில வியாபார நிலையங்கள் சிறந்தும், முடியும் காணப்படுகிறது.