பாறுக் ஷிஹான்-
இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு இலங்கை தமிழரசுக்கட்சி விடுத்த வேண்டுகோளினை ஏற்று அம்பாறை மாவட்டத்தில் தமிழர் செறிந்து வாழும் பகுதியில் ஹர்த்தால் இன்று (18) அனுஸ்டிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை, மல்வத்தை, நாவிதன்வெளி, மத்தியமுகாம், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், தம்பிலுவில், கோமாரி, தம்பட்டை பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன.
இருந்த போதிலும், பொதுப்போக்குவரத்து வழமை போன்று இப்பகுதியில் நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது. இது தவிர, தனியார், அரச வங்கிகள் வழமை போன்று இயங்கியதுடன், தனியார் நிறுவனங்கள் அரச திணைக்களங்களும் மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டன.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் திங்கட்கிழமை (18) காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் இந்த ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் வணிகப்பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குகின்றனர்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுமையாக முடங்க வேண்டும். அதனுடாக அரசாங்கத்துக்கு வலுவான செய்தியை எடுத்துரைக்க வேண்டுமென்று இலங்கைத்தமிழரசுக்கட்சி பொதுமக்களிடம் வலியுறுத்துகிறது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியைச்சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் சடலம் கடந்த 8ம் திகதி முத்தையன்கட்டு குளத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
முத்தையன்கட்டு பகுதியைச்சேர்ந்த இளைஞர்களை இராணுவத்தினர் ஆகஸ்ட் 7ம் திகதி முத்தையன்கட்டு முகாமிற்குள் அழைத்துச்சென்றதாகவும், இராணுவத்தினரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அதனால் ஒரு இளைஞர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு 'முத்தையன்கட்டு முகாமிற்குள் ஒரு தரப்பினர் அனுமதியின்றி சென்றதாகவும், அவர்களை விரட்டியடிக்கும் போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக குறிப்பிட்டு இச்சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டிருந்தது.
முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடிகொண்டுள்ள இராணுவ பிரசன்னத்துக்கும் இளைஞனின் மரணத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தது. இத்தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதிக்கு எழுத்துமூலமாக அறித்து கடந்த 15ம் திகதி ஹர்த்தாலில் ஈடுபட அறிவித்திருந்தது.
இருப்பினும், பல்வேறு நியாயமான காரணிகளால் ஹர்த்தால் இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்பூரண ஹர்த்தாலுக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், சிவில் தரப்பினர், வணிக அமைப்பினர் முழுமையாக ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தாலில் அமுல்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹர்த்தாலில் ஈடுபடுமாறு இலங்கைத்தமிழரசுக்கட்சி சகல தரப்பினரிடமும் வலியுறுத்துகிறமை குறிப்பிடத்தக்கது.