பாறுக் ஷிஹான்-
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாகச் செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனைப்பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பாதிக்கப்பட்ட பெண் தனது வழக்கொன்றிற்காக குறித்த அலுவலகத்திற்குச்சென்று வந்த நிலையில், தன்னிடம் இலஞ்சமாக பணம் கேட்கப்படுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரிகளிடம் கடந்த மாதம் முறைப்பாடொன்றினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய இன்று மாறுவேடத்தில் மருதமுனை பகுதியில் இயங்கி வந்த குவாஷி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்திற்கருகில் அதிகாரிகள் காத்திருந்துள்ளனர்.
இதன்போது முறைப்பாட்டினை வழங்கிய அப்பெண் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியிடம் சென்று குறித்த இலஞ்சப்பணத்தை தருவதாக கூறி ரூபா 300 யை நீதிபதியின் மனைவியிடம் வழங்கியுள்ளார்.
இதன் போது, அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிபதி மற்றும் மனைவியைக்கைது செய்ததுடன், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணியும் அகில இலங்கை சமாதான நீதிபதியுமான மருதமுனையைச்சேர்ந்த பளீல் மௌலானா அமீருல் அன்சார் மௌலானா கடந்த 01.03.2023ம் திகதியிலிருந்து செயற்படும் வண்ணம் இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
காதி நீதிமன்றம் என்பது இஸ்லாமிய தனியார் சட்டத்தின் கீழ் திருமண, விவாகரத்து மற்றும் குடும்ப விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாகும். இலங்கையில், முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு பகுதியாக காதி நீதிமன்றங்கள் உள்ளன.