சம்மாந்துறை பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வீதி விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயமடையும் சம்பவங்கள் தொடர்பாக, பொதுப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில், பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், சம்மாந்துறை பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பொலிஸ் நிலையம், கல்வி மற்றும் சுகாதார திணைக்களங்கள், வழிபாட்டு தளங்களின் பிரதிநிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
விபத்து ஏற்படும் காரணங்கள், பாதிப்புகளும், அவற்றை குறைக்கும் நடைமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

