Ads Area

மாளிகைக்காடு மையவாடி கடலரிப்பில் மீண்டும் மனித எச்சங்கள் கண்டெடுப்பு – தொடர்ந்தும் கடலில் காவு கொள்ளப்படும் மையவாடி.

 நூருல் ஹுதா உமர்


மாளிகைக்காடு- சாய்ந்தமருது மக்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் மாளிகைக்காடு மையவாடி கடலரிப்பு பகுதியில் மீண்டும் மணற்பரப்புகள் காவுகொள்ளப்பட்ட நிலையில், மனித எச்சங்கள் தொடர்ச்சியாக வெளிப்பட ஆரம்பித்துள்ளன. கடந்த சில நாட்களாக நிலவும் கடலரிப்பு காரணமாக பல அடுக்கு மணல் பகுதிகள் கரைந்து போக, முன்பாக புதையுண்ட நிலையில் இருந்த எச்சங்கள் வெளிப்பட்டு காணப்படுகிறது.


அனர்த்த அதிர்ச்சியும் அச்சமும் நிலவும் இந்த சூழலில், பல எலும்புக்கூடு பகுதிகள், கபுர் துணுக்குகள், மற்றும் மனித எச்சங்களாக கருதப்படும் பொருள்கள் கரையோரத்தில் சிதறிக் காணப்படுகின்றன. சில இடங்களில் பாதி புதைந்த நிலையில் எச்சங்கள் தென்பட்டதை அடுத்து, மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்தினர் உடனடி தலையீட்டை கோரியுள்ளனர்.


ஏற்கனவே இது தொடர்பான தகவல்கள் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் போன்ற அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. கரையோரம் தொடர்ந்து காவுகொள்ளும் அபாயம் நிலவுவதால், பொதுமக்கள் அந்த பகுதியை அணுகாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட தடுப்பு அணைகளையும் தாண்டி கடலரிப்பு நிலை இங்கு உருவாகியிருப்பதால் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா, ஜனாஸா அமைப்புக்கள் என்பன இந்த மையவாடி விடயத்தில் பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe