நேற்று (21-04-2018) கல்முனை ஷாஹிறா தேசிய பாடசாலையில் இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம், லக்ஸ்டோ மீடியா நெற்வேக் ஸ்ரீலங்கா மற்றும் இமயம் கலைக்கூடல் மன்றம் என்பன இணைந்து மிகப் பிரமாண்டமாக நடாத்திய "கிழக்குச் சீமையிலே" நிகழ்வின் ஓரங்கமாக இடம்பெற்ற "திறமைக்கான தேடல் பாராட்டு விழா-2018 நிகழ்ச்சியில் சம்மாந்துறையைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய எஸ்.எம். அமீர் முஹம்மட் அவர்கள் "தேசாபிமானி" விருதும், "சமூகச் சுடர்" விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந் நிகழ்வில் காலஞ் சென்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும் பிரபல கவிஞரும், எழுத்தாளரும், சஞ்சிகைகளின் ஆசிரியரும், பத்திரிகை நிருபரும், சமாதான நீதவானுமாகிய எஸ்.எம்.மொஹம்மட் றாபீக் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் இடம் பெற்றது. இவர் எஸ்.எம்.அமீர் முஹம்மட் அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இந் நினைவேந்தல் நிகழ்வின் ஓரங்கமாக பாலமுனை பாறூக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கவியரங்க நிகழ்வில் எஸ்.எம்.அமீர் முஹம்மட் அவர்களினால் “ஒலிவாங்கி” என்ற தலைப்பில் கவிதை ஒன்றும் பாடப்பட்டது.
இந் நிகழ்வுக்கு இலங்கையின் பல பாகத்திலிருந்தும் ஏராளமான கவிஞர்களும், கவிதாயினிகளும் கலந்து சிறப்பித்தனர்.
கவியரங்க நிகழ்வில் எஸ்.எம்.அமீர் முஹம்மட் அவர்களினால் பாடப்பட்ட கவிதை இதோ.
ஒலிவாங்கி
***********
பொய்களையும் மெய்களையும்
பொறுமையாய் உள்ளெடுக்கும்
ஒற்றைக் காது...........!
போலிகளையும் கேலிகளையும்
கொட்டி வீசும்
பொதுநலவாதி............!
எத்தனை வாய்களின் எச்சிலை உமிழ்கிறது
எத்தனை கொடுமைகள் சினுங்கக் கேட்கிறது.........!
மௌனமே
தெரியாத மொழி
அமைதியே
அறியாத வழி
கோடிச் செவிகளை இறக்கச் செய்தும்
நாடிய விதிகளை
உரக்க ஒலிக்கும்
எதிர்பார்ப்பில்லா ஏகாந்தம்...........!
அற்புதமான ஊடகம்
கசடில்லா காகிதம்
அரசியல் பொய்யர்களால்
அலங்கோலப் படுகிறது.....!
ஒலிவாங்கி
எவ்வளவு
வலி தாங்கினாலும்
அரசியல்
பழிவாங்கலால்
இறந்து தளைக்கிறது......!