செய்தி - காரைதீவு சகா
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முச்சக்கர வண்டிகளை சூட்சுமமாகத் திருடி, போலி ஆவணம் தயாரித்து, இயந்திரச்சட்டக இலக்கத்தை மாற்றி விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்றை நேற்று சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
10 முச்சக்கர வண்டிகளையும், ஐந்து சந்தேகநபர்களையும் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னுஅசார் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினர் அதிரடியாகச் செயற்பட்டு மீட்டுள்ளனர்.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி லொக்குலியனகே உள்ளிட்ட ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்களை கொண்ட குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
சந்தேகநபர்களையும், முச்சக்கர வண்டிகளையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி இப்னுஅசார்,
கடந்த 13ம் திகதி எமக்குக் கிடைத்த தகவலின்படி நாம் விரைந்து செயற்பட்டோம். எமது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு மேற்கொண்டோம். அத்துடன், முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியிருந்தோம். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனையடுத்து, மிகவும் சூட்சுமமான முறையில் முச்சக்கர வண்டிகளை திருடி வந்த நபர்களை கைது செய்துள்ளதுடன், முச்சக்கர வண்டிகளையும் கைப்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.