திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் முயற்சியின் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கொண்டவட்டான் விவசாய மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதுடன், சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகளை விவசாயிகள் முன்னெடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அனுமதியும் வழங்கியுள்ளது.
கொண்டவட்டான் பிரதேசத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த விவசாயிகள் 370ற்கும் மேற்பட்ட ஏக்கர் வயற்காணிகளில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் சுமார் 75 வருடகாலமாக விவசாயம் மேற்கொண்டு வந்தனர். கடந்த வாரம் இப்பிரதேசத்திலுள்ள 170ற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமானதென அறிவித்துள்ளதோடு, அங்கு நெற்செய்கை செய்ய முடியாதவாறு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளினால் தடைவிதிக்கப்பட்டிருந்தன.
இத்தடைவிதிப்பினால் விவசாயிகள் செற்செய்கை செய்ய முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இதனை விவசாயிகள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் கவனத்திற்கு கொண்டு வந்தனையடுத்து நேற்று (29) பாராளுமன்ற உறுப்பினர் கொண்டவட்டான் பிரதேசத்திற்கு விஜயம் செய்து வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளை அழைத்து பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் தலைமையிலான விசேட கூட்டமும் நடைபெற்றது.
இதில் அம்பாறை மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கப் பணிப்பாளர் எம். விக்கிரமதிலக, விவசாயிகள், காணி உரிமையாளர்கள், விவசாய அமைப்புக்களின் பிரநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
1956ஆம் ஆண்டைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் இக்காணிகள் வன பாதுகாப்பு பிரதேசத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் இக்காணிகளில் விவசாயம் செய்யமுடியாது. என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்க அதிகாரிகளும், அரசாங்கத்தினால் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டு விவசாயம் மேற்கொண்டு குறித்த காணிகளில் கடந்த 75வருட காலமாக வந்ததாகவும் விவசாயிகள் தெரிவித்தோடு அதற்கான ஆதரங்களையும் காண்பித்தனர். இப்பிரச்சினை சம்பந்தமான விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதனையடுத்து இறுதியில் இக்காணிகளில் சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகளை விவசாயிகள் முன்னெடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அனுமதியும் வழங்கியது.
விவசாயிகளுக்குச் சொந்தமான குறித்த இக்காணிகள் வன பாதுகாப்பு பிரதேசத்திற்குள் உள்வாங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிதனையடுத்து அதனை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விரைவில் வன பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து விடுவித்து தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் விவசாயிகளுக்கு வாக்குறுதியினை அளித்தார்.
இப்பிரச்சினையினை தீர்க்க துரிதமாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மன்சூருக்கு விவசாயிகள் நன்றியினையும் தெரிவித்தனர்.