Ads Area

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறைக்கு 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

அன்சார் காசீம்.

கிராம எழுச்சி “கம்பெரலிய” எனும் துரித கிராமிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்குட்பட்ட பிரதேசங்களின் கிராம அபிவிருத்தித் திட்டங்களுக்குகென 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை, இறக்காமம் மற்றும் நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள "கம்பெரலிய" அபிவிருத்தித்தி திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை இனம்காண்பதற்கான கலந்துரையாடல் கூட்டம் கடந்த வாரம் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எம்.முகம்மட் ஹனீபா தலைமையில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே - கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து கிராமத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக நிதி மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு ஆகியன இணைந்தே இந்தத் திட்டத்திற்குகென 80,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளன. இத்திட்டம் நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்குகென சம்மாந்துறைப் பிரதேசத்திற்கு சுமார் 100மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அதற்கமைய சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 51 கிராம சேவகர் பிரிவுகளில் கிராமிய வீதிகள் புனரமைப்பு, நீர்ப்பாசன அபிவிருத்தி, பாடசாலை துப்பரவேற்பாட்டு வசதிகள், விளையாட்டு மைதான புனரமைப்பு, மின்சாரம் வழங்கல், பசுமைப்பூங்காக்கள் அமைத்தல், வீடமைப்பு அபிவிருத்தி, காணி உறுதிகள் வழங்கல், மதஸ்தலங்களை அபிவிருத்தி செய்தல், வாராந்த சந்தை வசதிகளை ஏற்படுத்தல், வாழ்வாதார உதவிகள் எனும் பல திட்டங்கள் இதன் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

தேசிய பொருளாதாரத்திற்கு கிராமியப் பொருளாதாரத்தின் பலம் மற்றும் சக்தியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்துவதுடன், அதனூடாக நிலையான அபிவிருத்தியை நோக்கிப் பயணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரினதும் பங்களிப்பு முக்கியமானதாகும். என்றார்.

இக்கூட்டத்தில் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத், பாராளுமன்ற உறுப்பினர் பிரத்தியோகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம் சகுபீர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe