சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ இறைச்சியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் கடந்த 17-ம் தேதி பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட இறைச்சியில் வால் நீளமாக இருந்ததால் அது நாய் இறைச்சியாக இருக்கலாம் என்ற புகார் எழுந்தது. எனவே, சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் இறைச்சியை கைப்பற்றியதுடன், இறைச்சி மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தற்போது வெளியாகி உள்ளது.
கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில், கைப்பற்றப்பட்ட இறைச்சி நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி என உறுதி ஆனது. அது சிறிய வகை ஆடு எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், இறைச்சி பிரியர்களிடையே கடந்த சில தினங்களாக ஏற்பட்ட அச்ச உணர்வு நீங்கியது.