பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதிமன்றம் செல்லாத ரவுப் ஹக்கீம் ரணிலை காப்பாற்ற சென்றாரா ? குற்றம் சாட்டுபவர்கள் யார் ?
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் சட்டத்தரணிக்குரிய ஆடையை அணிந்துகொண்டு வழக்காடுவதற்காக உச்ச நீதிமன்றம் சென்றது சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அளுத்கமை, பேருவளை, ஜிந்தோட்டை, திகன, கண்டி கலவரங்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டபோதும், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் தீக்கிரயானபோதும் அணியாத இந்த ஆடையை இப்போது ஆட்சி அதிகாரத்துக்காகவும், ரணிலை காப்பாத்தவும் அணிந்துள்ளார் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டாகும்.
அடிப்படை உரிமை மீறல் வழக்குக்கும், குற்றவியல் வழக்குக்கும் இடையில் வேறுபாடுகள் தெரியாமலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவுமே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மூலம் மக்களை குழப்ப முற்படுகின்றார்கள்.
குற்றத்தின் தன்மைகள், வழக்குகளின் வகைகள், அவைகளை எவ்வாறு பதிவு செய்வது ? எந்த நீதிமன்றத்தில் பதிவு செய்வது ? போன்ற விளக்கங்களை விபரிப்பதற்கு சட்டத்தரணிகளே பொருத்தமானவர்கள்.
முஸ்லிம் காங்கிரசில் ஏராளமான சட்டத்தரணிகள் இருந்தும், தலைவருக்கு முன்பாக படம் காட்டுவதற்கு அவர்கள் இருக்கின்றார்களே தவிர, இவ்வாறான விசம பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு எந்தவொரு சட்டத்தரணிகளும் முன்வரவில்லை.
இலங்கையில் நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பிரதான நீதிமன்றங்கள் உள்ளது.
அடிப்படை உரிமை மீறல்களுக்கெதிராகவும், கீழ் நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேன்முறையீடு செய்யவுமே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
மேலே கூறப்பட்ட கலவரங்களினால் பாதிப்புற்றவர்கள் குற்றவியல் வழக்கினை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. பாதிக்கப்பட்ட நபர் முதலில் சம்பவம் நடைபெற்ற பிரதேச அதிகாரத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும்.
அதன்பின்பு பாதிப்புக்களின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு பிரிவுகளில் பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வார்கள். பொலிசில் முறைப்பாடு செய்யும்போது சாட்சியங்களுடன், தங்களை தாக்கியவர்களின் பெயர் விபரங்களை வழங்கினால் மட்டுமே அந்த குற்றவாளிக்கெதிராக குற்றவியல் வழக்கினை தாக்கல் செய்ய முடியும்.
அவ்வாறு குற்றமிழைத்தவர் யாரென்ற பெயர் விபரம் தெரியாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. ஆனால் அந்த பொலிஸ் முறைப்பாட்டினை நஷ்டஈடு பெறுவதற்கான ஆவணமாக பயன்படுத்த முடியும்.
வழக்கின் குறுக்கு விசாரணையின்போது நியாயமான சந்தேகங்களுக்கப்பால் சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். வழங்குகின்ற சாட்சியங்களில் சந்தேகம் இருந்தாலும் வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.
ரவுப் ஹக்கீம் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது குற்றவியல் வழக்கல்ல. மாறாக அரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுக்கு தடைவிதிக்கக்கோரிய அடிப்படை உரிமை மீறலுக்கு எதிரானதாகும்.
ஆனால் அளுத்கம, ஜிந்தோட்ட, திகன போன்ற கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது பிரதேச பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்திருந்தால், பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருப்பார்கள்.
கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே யார் குற்றவாளி என்று தெரியாமலும், குற்றவாளிக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யாமலும் இருக்கின்றபோது, மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் என்ன செய்வது ?
எனவே குற்றத்தின் தன்மைகள் என்ன என்றும், எந்த வழக்கை எந்த நீதிமன்றத்தில் பதிவு செய்வது என்றும் தெரியாமல், மக்களை குழப்பி அரசியல் இலாபம் தேடும் கூலிக்கு மாறடிக்கின்றவர்களின் விசமப்பிரச்சாரமனது அவர்களது முட்டாள்தனத்தினை வெளிச்சம்போட்டு காண்பிக்கின்றது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது