Ads Area

அரசியல் நெருக்கடியில் இருந்து வெளிவர ஜனாதிபதி முனைப்பு !

Masihudeen Inamullah 

கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மாலையில் அதிரடியாக பிரதமர் ரணில் விக்மசிங்கவை பதவி நீக்கம் செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினை பிரதமராக நியமித்ததன் மூலம் பாரிய அரசியல் மற்றும் அரசியமைப்பு நெருக்கடிகளை ஜனாதிபதி மைத்திரி தோற்றுவித்துள்ளமை இன்று தேசத்தினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த அதிரடி நடவடிக்கை மூலம் பிரதமர் என்ற ஒரு தனி நபரை மாத்திரமன்றி அவரது தலைமையிலான கூட்டணி அரசையும் முழுமையாக கவிழ்த்து விட்டமையை  அரசியமைப்பு சூழ்ச்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆட்சிக் கவிழ்பாகவே பல்வேறு தரப்பினரும் அவதானிக்கின்றனர்!

2015 ஆம் ஆண்டு எதிர்க் கட்சிப் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் பொழுது வழங்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் அரசியலமைப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது சீர்திருத்தச் சட்டத்திற்கு முரணாக இந்த பதவி நீக்கம் மேற்கொள்ளப் பட்டுள்ளது என்பது முதலாவது குற்றச் சாட்டாக இருந்த பொழுதும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவற்ற, மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ஒருவரை பிரதமாராக நியமித்தமை மற்றுமொரு குற்றச் சாட்டாகும்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் பாராளுமன்றத்தில் உடனடியாக ஒன்று கூடுவதனை அல்லது தமது பெரும்பான்மை பலத்தினை நிரூபிப்பதனை தடுப்பதற்காக அடுத்த அதிரடியாக ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்ற அமர்வுகளை நவம்பர் மாதம் 16  ஆம் திகதி ஒத்திவைத்தார், மீண்டும் பாராளுமன்ற அமர்வுகள் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது; தொடர்ந்து 29, 30 ஆம் திகதிகளில் மைத்திரி மஹிந்த அரசின் அமைச்சரவை நியமனங்கள் இடம் பெறுகின்றன.

அரசு அமைத்த பொழுதும் பாராளுமன்றத்தில் தமது பெரும்பன்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தில் நவம்பர் மாதம் 09 ஒன்பதாம் திகதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றத்தைக் கலைத்து   ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம் பெறுமென ஜனாதிபதி மைத்திரி மற்றுமொரு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்கிறார்!

19 அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் படி நான்கரை வருடங்கள் கழியுமுன் ஜனாதிபதியினால்     பாராளுமன்றத்தை தன்னிச்சையாக கலைக்க முடியாது அவ்வாறு கலைப்பதாயின்  பாராளுமனறத்தில் பிரேரணை கொண்டுவரப்பட்டு மூன்றிலிரு பெரும்பான்மை பெறப்பட்டால் மாத்திரமே முடியும்; என்ற அடிப்படயில் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன, அவற்றை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றம் 13 ஆம் திகதி மாலை ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இடை நிறுத்தி தடையுத்தரவு விதித்தது.

தடையுத்தரவின் படி பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் இருந்த நிலைக்குத் திரும்பவேண்டும், அதன்படி அமர்வுகள் ஒத்திவைக்கப் பட்ட நிலையில் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின் படி நவம்பர் மாதம் 14 ஆம் நாள் மீண்டும் அமர்வுகள் ஆரம்பிக்கப் படுவதற்கான அழைப்பிதழ்களும் அனுப்பி வைக்கப் பட்டிருந்ததால் சபாநாயகர் குறித்த தினத்தில் பாராளுமன்றம் கூடுமேன்பதனை உறுதி செய்து அவை அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

அன்றைய தினம் ஜனாதிபதியிற்கு பதிலாக அவரது உரையை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சமர்ப்பித்து அமர்வுகளை ஆரம்பித்தவுடன் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி  புதிய அரசின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜே வீ பி கட்சியினர் கொண்டுவந்து 122 பேர் ஆதரவாக வாக்களித்ததாக சபாநாயகர் கையொப்பங்களுடன் ஜானாதிபதியிற்கு அறிவிக்கின்றார், அது முறையாக இடம்பெறவில்லை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்ப இடம் பெறவில்லை எனவே அதனை அங்கீகரிக்க முடியாது என ஆளும் தரப்பினர் மறுத்தனர்.

ஜானாதிபதியவர்களும் மீண்டும் ஒருமுறை வாக்கெடுப்பை முறையாக நடாத்துமாறும், எதிர்காலத்தில் அரசியலமைப்பை மீறியதாக தனக்கெதிராகபிரயோகிக்கப் படமுடியுமான வாக்கியங்களை நீக்குமாறும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அடுத்தநாள் காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய பொழுதும் ஆளுந்தரப்பினரின் பலத்த இடையூறுகளுக்கு மத்தியில் மீண்டும் ஒருமுறை வாக்கெடுப்பு இடம் பெற்றது, ஈற்றில் அதனையும் ஜனாதிபதி நிராகரித்துவிட்டார்.

நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் பாராளுமன்ற தெரிவுக் குழு நியமனம் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூடி ஆராய்ந்த பொழுது தமக்கு  ஆளுந்தரப்பினருக்கு ஐவரும் ஐக்கியதேசிய முன்னணிக்கு ஐவரும், தமில் தேசியக் கூட்டணி மற்றும் ஜே வீ பி யினருக்கு தலா ஒருவருமாக நியமிக்கப் பட முடிவு காணப்பட்ட பொழுது, 12  உறுப்பினர்களுள் தமக்கு 7 உறுப்பினர்கள் வேண்டும் என ஆளுந்ததரப்பினர் விடாப்பிடியாக கூறி விட்டு வெளிநடப்பு செய்து விட்டனர், என்றாலும் குறிப்பிட்ட பங்கீட்டை வாக்கெடுப்பிற்கு விட்ட சபாநாயகர் 121 உறுப்பினர்கள் தெரிவுக்குழுவை அங்கீகரித்துள்ளதாக அறிவித்தார்.

இவாறான நிலையில் அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, குறிப்பாக 2018 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்க வரவு செலவுகள் குறித்த திட்டம் கடந்த நவம்பர் மாதம் பாராளுமனறத்தில் சமர்ப்பிக்கப் பட்டிருத்தல் வேண்டும், தற்போதைய நிலையில் வரவு செலவுத் திட்டம் அல்லது இடைக்கால கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டால் தோல்விகாணும் சாத்தியப் பாடுகளே அதிகம்.

விடயம் இவ்வாறிருக்க பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமனறத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் 07 ஆம் திகதி ஆரம்பமாகி தீர்ப்பு எதிரணியினருக்கு சார்பாக வரும் என்ற அச்சம் ஆளுந்தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

எனவே குறிப்பிட்ட அறிவித்தலை ஜனாதிபதி வாபஸ் வாங்கிக் கொள்ளும் வழிவகைகளை ஆராய்வதாகவும் தெரிகிறது, அதனை வாபஸ் வாங்கிக் கொள்ளுமாறும் ஆட்சியை கொண்டு செல்வதற்கான பெரும்பான்மையை தம்மால் நிரூபிக்க முடியுமெனவும் தாம் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டதாக அமைச்சர் திசாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

உண்மையில் நீதிமன்றத் தீர்புகளோ சபாநாயகரின் தீர்ப்புகளோ தனக்கு எதிராக வரும் பட்சத்தில் தனக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் சாத்தியப்பாடுகள் குறித்து ஜனாதிபதி அஞ்சுவதாகவும் அறிய முடிகிறது.

அரசியல் மற்றும் அரசியலமைப்பு களநிலவரங்கள் மட்டுமல்லாது சர்வதேச பிராந்திய நாடுகளின் அழுத்தங்களும் அரசினை பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதோடு பொருளாதார ரீதியிலும் அரசு பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய அரசியல் பொருளாதார இராஜதந்திர நெருக்கடிக்குள் நாட்டை இட்டுச் சென்ற ஜனாதிபதி அதிலிருந்து வெளிவருவதற்கான வழிவகைகளை கண்டறிவதில் அதிக கரிசனை காட்டுவதாகவும் தேவைப்படின் விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய மஹிந்த தரப்பினர் தயாராக இருப்பதாக்கவுமே களநிலவரங்கள் உணர்த்துகின்றன!

29 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைகளின் படி அரசின் மீதான நம்பிக்கை இல்லாப் பிரேரணையை சமர்ப்பித்து வெற்றிகாணும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ராணில் மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அல்லாத ஒருவரை சிபாரிசு செய்யும் பட்சத்தில் தான் அவரை பிரதமாராக நியமிக்கத் தயாராக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளார்.

இனி வரும் ஒவ்வொரு தினமும் அரசியல் களநிலவரங்கள் மிகவும் பரபரப்பாக அமைவதோடு அரசாங்கத்திலும் மாற்றங்கள் ஏற்பட சாத்தியப்பாடுகள் காணப் படுகின்றன. 

Thanks - http://inamullah.net/
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe