ஆசிரியர் பணியில் பொன் விழா காணும் பிரபல தமிழ் ஆசிரியரும், மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் பிரதியதிபருமான நிசார் உடையார், மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க அமீரக கிளையின் ஏற்பாட்டில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை அபூ தாபி நகரில் நடைபெற்ற விருது விழங்கும் நிகழ்வில், மாவனல்லை ஸாஹிராhக் கல்லூரியின் நூற்றுக்கணக்கான பழைய மாணவர்கள் தங்களது குடும்பங்களுடன் கலந்து சிறப்பித்தனர்.
ஆசிரியர் பணியில் பொன் விழா காணும் எச்.எம்.யூ. நிசார் உடையார் மாவனல்லை ஸாஹிராக் கல்லூரிக்கு ஆற்றியுள்ள சேவைகள் செல்லில் அடங்காதவை. பிரதி அதிபராகவும், சிரேஷ்ட தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றிய இவரின் காலம் பாடசாலையின் பொற்காலம் என கருதப்படுகின்றது.
மாவனல்லை மண்ணில் முக்கிய பிரமுகராக திகழ்கின்ற இவர், பாடசாலை அபிவிருத்தி, வளங்களை விருத்தி செய்தல், தரமான வசதிகளை ஏற்படுத்தல், ஆசிரியர்களை வழி நடத்துதல், மாணவர்களின் ஒழுக்க நலன்களை வளர்த்தல், தூர நோக்கு திட்டமிடல் போன்ற செயல் பாடுகளினால் பல தலை முறைகளை வழிநடாத்தியன் மூலம் மாவனல்லை மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.