மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்ததையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும், கட்சி தாவி, அமைச்சர் பதவிகளைப் பெற்றிருந்தனர். எனினும், நீதிமன்றத் தீர்ப்புகளினால், அடுத்த சிலநாட்களிலேயே இவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ரணில் தரப்புக்கு மீண்டும் தாவ இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரி-மஹிந்த அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், ரணில் விக்கிரமசிங்கவையும், வியாழேந்திரன் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.