அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது நாட்டிலே ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டனர்களே தவிர எந்தவொரு தேவைக்காகவும் அல்ல. என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
சித்திலெப்பை ஆய்வுப் பேரவையின் முஸ்லிம் தேசியமும் சகவாழ்வும் நூல் ஆய்வு அரங்கும், “நமது முஸ்லிம் நேசன்” நூல் அறிமுக விழாவும் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்திய மண்டபவத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ. அமீர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைக்கு விலைபேசி இந்த நாட்டின் ஜனநாயகத்தையே விற்றுவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு நாங்கள் தகுந்த பாடத்தைப் புகட்டியுள்ளோம். சிறுபான்மைக் கட்சிகளின் உறுதியான நிலைப்பாடுகள் தான் ஜனநாயகத்தைப் பாதுகாத்தது.
சிறுபான்மை கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடு நாட்டின் அரசியல் யாப்பை பாதுகாத்துள்ளதுடன், நீத்தித்துறையின் சுயாதீனத்தையும், சட்டத்துறையில் மக்கள் இறைமையையும் உறுதிப்படுத்தியுள்ளதோடு, ஜனநாயகத்தையும் பாதுகாத்தது.
அறிஞர் சித்தி லெப்பை எனும் நாமம் நினைவுகூரப்படும் போது சிந்தையில் உதிப்பது இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி எழுச்சி பற்றிய விடயமே. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் குறிப்பாக கல்வி வரலாற் றில் குறிப்பிடத்தக்க ஒரு மறுமலர்ச்சி உருவாக காரணகர்த்தாவாக விளங் கியவர்தான் அறிஞர் சித்திலெப்பை யாவார்.
எனவே, இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களின் தேசியத்தையும், சுயநிர்ணயத்தையும் உத்தரவாதப்படுத்த இப்போதிருந்தே முயற்சிக்க வேண்டும். அதுவும் அறிஞர் சித்திலெப்பையின் அணுகுமுறைகளைப் பின்பற்றி நமது தேடல் அமைய வேண்டும். அதற்காக என்னால் முடியுமான பங்களிப்பினை சித்திலெப்பை பேரவைக்கு செய்யத் தயாராகவுள்ளேன். என்றார்.
இதில் சம்மாந்துறை மனிதநேய நற்பணிப்பேரவையின் தலைவர் இர்ஷாத் ஏ.காதர், நியூஸ் பிளஸ் பிரதம ஆசிரியர் கியாஸ் ஏ.புகாரி, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத், பிரதேச சபை உறுப்பினர்கள், கவிஞர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.