Ihshan J.M.I Mohamed
ஒரு குழந்தை கற்பத்தில் உருவாகும் போதே அக் குழந்தை பற்றிய கற்பனை, ஆசை அந்த பெற்றோரை சூழ்ந்துவிடுகின்றது. படிப்படியாக வளரும் குழந்தையுடன் பெற்றோர் ஆசையும் எதிர்பார்ப்பும் கூர்ப்புற்று வளர்ந்து சமூகத்திற்கு பயனுள்ள குழந்தையாக மற்றவர் மதிக்கும் குழந்தையாக தன் குழந்தை திகழவேண்டும் என்ற அவா யாரைத்தான் விட்டது.
இந்த பின்னணியில் வளர்க்கப்படும் பெண்குழந்தையின் வாழ்வில் ஒரு வரம்பையும் வரையறையையும் விதித்து விடுகின்றதுடன் விதியாகவும் மாறிவிடுகின்றது அக்குழந்தையின் திருமண பந்தம்.
சுதந்திரம், ஆசைகள், அதிகாரம் செலுத்திய ஒரு பெண்குழந்தை திருமணம் ஆனதும் அவளின் நிலை முழுமையாக மாற்றப்படும் சூழல் உருவாகும். குறிப்பாக கல்வி கற்ற பெண்ணின் வாழ்க்கை பரிதாபம்தான். அவ்வகையில் அண்மையில் என் தோழியின் தோழி பற்றிய ஒரு செய்தி கேள்வியுற்றேன். அதன் தாக்கமே இப்பதிவு.
சம்பவம் -
அவள் ஒரு பல்கலைக்கழகம் இண்டாம் வருட மாணவி. திருமணம் ஆகி சுமார் இரண்டு மாதங்கள் கடந்து இருக்கும். கணவன் வேண்டுகோளிற்கு இணங்க அவள் பல்கலைக்கழக வாழ்கையை இடை நிறுத்திவிட்டாள்.
மேற்படி சம்பவம் போன்று இந்த சமூகத்தில் ஏராளம்... இரண்டாவது சம்பவம் ஒருவகை ஏற்றுக்கொள்ள முடியும். இஸ்லாமிய சிந்தனை, அக்காலத்தில் இருந்த தொழில் தேவைப்பாடு, பெண் வேலைவாய்ப்பு பற்றிய மடைமை சிந்தனை இவற்றை உதாரணம் காட்ட முடியும். ஆனால் இன்றும் அதே சிந்தனை இருப்பதுதான் ஒரு வேடிக்கை.
சரி விடயத்திற்கு வருவோம்...
ஒரு பெண்குழந்தை பாலர் பாடசாலை கல்வி தொடக்கம் பல்கலைக்கழக கல்வி வரை சுமார் 15 வருடங்கள் எத்தனையோ தடைகளை தாண்டி பயணிக்கின்றாள். இதற்காக அவள் பெற்றோர்கள் முதலீடு செய்த பொருளாதாரம், நேரம் மற்றும் பராமரிப்பு என்பன ஏராளம். இவற்றை தாண்டி இந்த சமூகத்தின் மனித வளமிக்க சொத்தாக வெளியீடு செய்யப்படும் இறுதித்தருவாயில் காணப்படும் முற்றிய கதிர் அவள். ஆனால் அறுவடை செய்யப்படாமல் அநியாயமாக அழிக்கப்படுவதை ஒரு சுயபுத்தியுள்ள எவனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
இடையில் இடைநிறுத்துவதன் மூலமாக பல்வேறு நஷ்டத்தை குறித்த பெண் மாத்திரமன்றி பெண் சார்ந்த சமூகமும் அனுபவிக்குகின்றது. உதாரணமாக மேல் குறிப்பிட்ட அந்த பெண் ஒரு BSc கற்கை மேற்கொண்ட பெண். அவள் இடையில் இடை நிறுத்துவதன் காரணமாக அவள் மூலமாக
01. இந்த சமூகத்தின் ஒரு BSc பெண் மானிட வளம் இழக்கப்படுகின்றது.
02. இதுவரை செலவு செய்த பொருளாதாரம் அனைத்தும் வீண் விரயம்.
03. அவள் மூலமாக இந்த சமூகத்தில் உருவாக்கப்பட இருந்த எதிர்கால சந்ததி இழக்கப்படுகின்றது.
மிக முக்கியமானது.
04. குறித்த பெண் பல்கலைக்கழகம் நுழைவு பெற்றதனால் அந்த இடத்தில் வேறு ஒரு மாணவன் BSc கற்கையை இழக்குகின்றான்.
ஆக மொத்த இழப்பு இரண்டு.
ஆகக்குறைந்தது பல்கலைக்கழக கற்கையை முழுமையாக பூர்த்தி செய்யவாவது இடம் அளியுங்கள். ஒரு பெண் என்பவள் குழந்தை உருவாக்கும் இயந்திரம் என்ற சிந்தனை மாறி இந்த சமூகத்தை உருவாக்கும் அறிவார்ந்த கருவை உருவாக்குபவள் என்ற சிந்தனை மேலோங்க வேண்டும்.
“உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன்" (அல்குர்ஆன் 3:195)