பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகளுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அணிந்திருந்த பர்தா உடை மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இதற்குத் தகுந்த பதில் அளித்துள்ளார் ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மான்.
ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ திரைப்படத்தின் 10-ம் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். மும்பையில் நடந்த இந்நிகழ்வில் ரஹ்மானின் மூத்த மகள் கதிஜா, ரஹ்மான் உடன் ஒரு உரையாடல் நிகழ்வை வழிநடத்தினார்.
இதில், தனது தந்தை குறித்து மிகுந்த பெருமையுடன் மேடையில் பகிர்ந்துகொண்டார் கதிஜா. விழா மேடையில் கதிஜா கண்கள் மட்டும் தெரியும் வகையில் பர்தா அணிந்திருந்தார். இந்த உடை மிகுந்த விவாதப் பொருளாக மாறியது.
சமூக வலைதளங்களில், ‘ரஹ்மான் மிகவும் பிற்போக்குவாதியாக நடந்து கொண்டுள்ளார். வெளியில் ஒரு தோற்றமும் உள்ளே வேறு மாதிரியானத் தோற்றமும் கொண்டவராக உள்ளார்’ என்ற கருத்துகள் எழுந்து வந்தன.
இதற்குப் பதிலளித்த கதிஜா ரஹ்மான், தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘நான் எந்த உடையை அணிய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். எனது தேர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் என் பெற்றோர்கள் பொறுப்பல்ல. விவரம் புரியாமல் தேவையில்லாத முடிவுகளுக்கு வரவேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.