Ads Area

கிழக்கிலங்கை முஸ்லிம்கள் இறுதிக் கட்ட முயற்சியாக என்ன செய்யலாம் ?

Masihudeen Inamullah 

கிழக்கிலங்கை முஸ்லிம்கள் இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை!
இறுதிக் கட்ட முயற்சியாக என்ன செய்யலாம் ?

வேறுபாடுகள் களைந்து முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை தயாரிப்பது காலத்தின் கட்டாயமாகும்.

புல்மோட்டை முதல் பொத்துவில் வரையிலும் முஸ்லிம்கள் இழந்த மேய்ச்சல் விளைச்சல் பாய்ச்சல் நிலங்கள் இன்னும் மீட்கப் படவில்லை.

அவர்களது குடிசனப் பர்ம்பளுக்கேற்ற உரித்தாக வேண்டிய அரச நிலங்கள் இராணுவ, புதைபொருள் ஆராய்ச்சி, திட்டமிட்ட குடியேற்றங்கள், புனித பிரதேசங்களுக்கென, பயிர்ச் செய்கைகளுக்கென ஆக்கிரமிக்கப் படுகின்றன.
அவர்களது உள்ளூராட்சி பிரதேச செயலக பிரிவுகளுக்கு உரித்தாக வேண்டிய நிலம் மற்றும் வளங்கள் எல்லை நிர்ணயங்களின் பொழுது திட்டமிட்ட அடிப்படையில் பறிக்கப்பட்டுள்ளன.

தீகவாபி விஸ்தீரணம் இறக்காமத்தினூடாக ஒலுவில் துறைமுகத்தை எட்டிப் பார்க்கிறது, துறைமுகத்திற்கு கப்பல் வந்ததோ என்னவோ கடல் வந்து விட்டது.

சுனாமிப் பேரலை அனர்த்தங்களால் வீடிழந்த முஸ்லிம்களுக்கு கட்டப் பட்ட ஐநூறு வீடுகளும் காடுகளாக மாறியிருக்கின்றன. அடிமட்ட அரசியல் அதிகார அலகுகளான உள்ளூராட்சி சபைகளின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாகின்றன.

அரசாங்கத்தல் உருவாக்கப் படும் புதிய கிராமங்கள்,வீடமைப்புத் திட்டங்கள், நகராக்கங்கள், காணிப் பங்கீடுகள், தொழில் முயற்சிகளுக்கான உதவிகள் எதுவுமே அவர்களது விகிதாசாரத்திற்கு ஏற்ப அவர்களை சென்றடைவதில்லை.

கரயோர மவட்டத்தில் முஸ்லிம் குடியிருப்புகள் மிகவும் நெருக்கடிமிக்கவையாக இருக்கின்றன, வீடுகள் வளைவுகள் காணி நிலம் என்பன இனிமேல் அடுக்குமாடிகளில் தான் என்ற நிலை., நிலத் தொடர்பற்ற தனி மாகனம் கேட்டு, பின்னர் தென்கிழக்கு அலகு கேட்டு, கல்முனைக் கரையோர மாவட்டம் கேட்டு இன்று தென்கிழக்கு அலகின் தலை நகர் கல்முனை மாநகர சபையையே இழக்கும் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற சரணாகதி நிலையில் எமது சத்திய, சாணக்கிய தனித்துவ அரசியல் சாந்தி சிரிக்கும் நிலையில் இருக்கிரது.

இனி இழப்பதற்கு எதுவுமே இல்லாத நிலையில் இருப்பவற்றைத் தக்க வைத்துக் கொள்ள நாம் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது.

பேரம் பேசும் வலிமையை இழந்து நமது போராட்ட அரசியல் குபெரார்களின் குட்டி சுல்தான்களின் ஏட்டிக்குப் போட்டியான சூதாட்ட அரசியலாய் மாறி நிற்கும் இந்த நிர்க்கதி நிலையில் புதிய தலைமுறைகள் எந்த இடத்தில் இருந்து மாற்றத்தை நோக்கிப் பயணிக்கலாம் என திக்குத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

"அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையாக இறுகப் பற்றிப் பிடியுங்கள்" என்ற எமது சங்க நாதம் இன்று யதார்த்தத்தில் சாத்தியமற்ற ஒரு விடயமாக பார்க்கப் படுகிறது, எமது உரிமைகள் சலுகைகள் கொள்கை கோட்பாடுகளை விட குட்டி சுல்தான்களின் முகாம்களும் அதிகாரங்களும் பூதாகரமாய் முன்னே வந்து அச்சுறுத்துகின்றன.

எந்தத் தீர்வை யோசித்தாலும் குட்டி சுல்தான்களின் சிவம் செல்வாக்கு ஆதரவுத் தளம் என வங்குரோத்து அரசியலின் அனைத்து அம்சங்களையும் புறந்தள்ள முடியாத திரிசங்கு நிலையில் புத்திஜீவிகள்.

இலங்கை முஸ்லிம் அரசியலின் தாயகம் என அழைக்கப் படும் கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியலுக்கு தென்னிலங்கை முஸ்லிம்களும் இணைந்துதான் அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் பெற்றுக் கொடுத்தோம், மத்தியில் ஆட்சியமைப்பவர் யார் என்பதனை தீர்மானிக்கும் அளவிற்கு.

ஆனால் மத்தியிலும் பிராந்தியத்திலும் குபேரர்களின் சூதாட்டமாகிப்போன எமது போராட்ட அரசியல் இன்று தென்னிலங்கை தேசிய அரசியலிலும் கிழக்கிலங்கை பிராந்திய அரசியலிலும் சாதனைகளை விட சோதனைகளையே கொண்டு வந்து தந்திருக்கின்றது, அரசியல் அனாதைகளாக இருந்த நாம் அரசியல் பணயக் கைதிகளாக இன்று மாறியிருக்கின்றோம்.

இனி என்ன செய்யலாம் ?

ஒவ்வொரு மாவட்ட முஸ்லிம்களதும் பிரச்சினைகளை நிரல் படுத்தி அந்தந்த மாவட்டத்தின் முன்னுரிமைப் பட்டியல்களைத் தயார் செய்தல் வேண்டும்.
அடுத்த கட்டமாக அவற்றை மையமாக வைத்து கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நிரல்படுத்தப் பட்ட முன்னுரிமைப் பட்டியலை மையமாக வைத்து உடனடி இடைக்கால நீண்டகால மூலோபாய திட்டங்களை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்!

இதனை பலமான சிவில் சமூக முன்னெடுப்பாக அந்தந்த தொகுதிகளிலும் மாவட்டங்களிலும் இருந்து தெரிவு செய்யப்படும் புத்திஜீவிகள் நிபுணர்கள் சமூக ஆர்வலர்கள், சமூக நல அமைப்புக்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மேற்கொள்ளுதல் வேண்டும்.

அடுத்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் வருவதற்கு முன்னர் அத்தகைய "கிழக்கிலங்கை முஸ்லிம் அரசியல் நிகழ்ச்சி நிரல்" ஒன்றை தயார் செய்து மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறான ஒரு பொதுவான வேலைத் திட்டத்தை நிகழ்ச்சி நிரலை மையமாக வைத்தே எதிர்வரும் ஜானாதிபதி, பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்கல் குறித்தும் பிராந்திய தேசிய அரசியலில் எமது நகர்வுகள் குறித்தும் நாம் உடன்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்!

எந்தவொரு கட்சியினதும் தலைவர்களினதும் எதேச்சாதிகார தற்துணிபு அரசியலுக்கும் இடம் கொடுக்கலாகாது. வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒற்றுமை காணும் இந்த இறுதிக் கட்ட முயற்சியை உடனடியாக சத்தியப் படுத்துவதற்கு சகல கட்சிகளும், ஷூரா சபைகளும் பள்ளி வாசல் சம்மேலனங்களும், பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளும், இளைஞர் மாதர் சங்கங்களும் ஒரு கலந்தாலோசனைப் பொறிமுறையில் ஒன்றிணைய வேண்டும்!
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe