அச்சத்தில் வாழும் அப்பாவி இஸ்லாமிய மக்களை நோக்கிய இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை.
இந்நாட்டில் இன்று இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை என்பது நிம்மதியை தரும் உண்மையாகும். கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இவ்வேளைகளில் இனவாதிகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் நேரடி ஆசீர்வாதம் வழங்கப்பட்டு இருந்தது.
ஆனால், இன்று நிலைமை முன்னேறியுள்ளது. இதை நாமே மாற்றியுள்ளோம்.
இன்று நாம் அரசாங்கத்துக்குள் உறுதியான நிலைப்பாடுகளை கொண்டுள்ளோம். இதனாலேயே, இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை என்ற உண்மை, இன்றைய துன்பம் நிறைந்த சவால் மிக்க சூழலில் ஒரு நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக தெரிகிறது.
அதுபோல் நடந்து முடிந்த சம்பவங்களால், அச்சத்தில் வாழும் அப்பாவி இஸ்லாமிய மக்களை நோக்கி, இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை என்ற எமது பாதுகாப்பு கவச நடவடிக்கை நீளுகிறது.
அதேவேளை சர்வதேச பயங்கரவாதத்தை எமது தாய்நாட்டு மண்ணில் இருந்து துடைத்து எறிவதில் நாம் திட சங்கற்பம் பூண்டுளோம்.

