கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்படுமானால் அவரிடம் மன்னிப்பு கோருவதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குருணாகலையில் கைதுசெய்யப்பட்டுள்ள வைத்தியரை பாதுகாக்கும் நோக்கில் அரசியல்வாதிகள் சிலர் கருத்துகளை முன்வைக்கின்றனர். அவர் குற்றமிழைக்கவில்லை என்பது விஞ்ஞானபூர்வமான விசாரணைகள் மூலமே உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
எனவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கும், அதிகாரிகளுக்கும் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கவேண்டும். இந்த விடயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கவே கூடாது. அத்துடன், அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படும் என அரசியல்வாதிகள் அழுத்தங்களையும் பிரயோகிக்க கூடாது.
என்ன நடந்தாலும், எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் நாம் அதிகாரிகளின் பக்கமே நிற்போம். எனவே, துணிகரமாக விசாரணைகளை நடத்திய உண்மைகளை கண்டறியுமாறு கேட்டுக்கொள்கின்றேன். குற்றவாளிகளுக்கு எவரும் வெள்ளையடிப்பு செய்யக்கூடாது.