Ads Area

நிறைமாத கர்ப்பிணிக்கு இரத்தம் கொடுக்க ரமலான் நோன்பை முறித்த மனிதநேய இளைஞர்!’

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் சலீம் மற்றும் சாதிக் அலி. இருவரும் சகோதரர்கள். கார் வைத்து வாடகைக்கு விடும் தொழில் செய்து வரும் இருவரும், சமூக நோக்கத்தோடுகூடிய செயல்பாடுகளில் அதீத ஆர்வத்தோடு செயல்படுபவர்கள். அடிக்கடி ரத்ததானமும் செய்வார்கள். இது ரமலான் நோன்புகாலம் என்பதால், இருவரும் கடுமையாக நோன்பிருந்து வந்தனர். இந்நிலையில், நள்ளிரவு பன்னிரெண்டரை மணிபோல், நண்பர்கள் இரத்ததானக் குழுவைச் சேர்ந்த பாலு என்பவர், சலீமுக்கு பதற்றத்துடன் போன் போட்டிருக்கிறார். `தாராபுரத்தில் லோகநாயகிங்கிற கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆபரேஷன் பண்ணி குழந்தையை எடுப்பதில் சிக்கல். அவருக்கு போதிய ரத்தத்தை உடனடியாக செலுத்தினால் மட்டுமே, தாயையும், சேயையும் காப்பாற்ற முடியும். பி பாசிட்டிவ் ரத்தம் தேவை' என்று சொல்லியிருக்கிறார். பாலுவின் பதற்றம் சலீமையும் சட்டெனத் தொற்றிக்கொண்டது.


அந்த நள்ளிரவுவேளையில் தனக்கு தெரிந்த ரத்ததானம் செய்யும் நண்பர்களை அழைத்து விசாரிக்க, 'பி பாசிட்டிவ் ரத்தவகை கொண்ட கொடையாளர்கள் இப்போதைக்கு யாரும் இல்லை' என்ற நெகடிவ் தகவலே கிடைத்திருக்கிறது. இதனால், தனது சகோதரர் சாதிக் அலியோடு கலந்துபேசிய சலீம், 'ஆபத்துக்கு பாவமில்லை' என்று முடிவுசெய்து, பாலுவுக்கு போன் போட்டு, 'நாங்களே ரத்தம் தருகிறோம்' என்று சொல்லி இருக்கிறார்கள். ஆமாம், இருவருக்கும் பி பாசிட்டிவ் ரத்தவகைதான். ஆனால், அதை கேட்ட பாலு, இன்னும் பதறி இருக்கிறார். 'கடுமையாக ரமலான் நோன்பு இருக்கும் நீங்கள் எப்படி ரத்தம் தரமுடியும்?' என்று மறுத்திருக்கிறார். 'கண்ணுக்கு முன்பே கலங்கிநிற்கும் ஒரு உயிருக்கு உதவி செய்யாமல், நோன்பு இருப்பதை அந்த அல்லாவே விரும்பமாட்டார். நாங்கள் காலை ஏழு மணிக்கெல்லாம் தாராபுரத்தில் இருப்போம்' என்று சொல்லிவிட்டு, போனை கட்செய்தார்கள். அப்படி சொன்னபடியே, இரவே தாராபுரத்திற்கு கிளம்பியவர்கள், இன்று காலை லோகநாயகிக்கு தேவையான ரத்தத்தை வழங்கி, லோகநாயகியை நலம்பயக்கச் செய்திருக்கிறார்கள். இந்த சகோதர்களின் இந்த அளப்பரியச் செயல் பலபக்கங்களில் இருந்தும், அவர்களுக்கு பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கிறது.

இதுகுறித்து, சலீமிடம் பேசினோம். ``ஒரு நானூறு ரூபாய் இல்லாம 35 வருஷத்துக்கு முன்னாடி எங்க அப்பாவை இழந்தோம். அதனால், விபரம் தெரிந்த நாளில் இருந்து, மற்றவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவனும்னு நினைச்சோம். வழக்கமாக நாங்க ரத்ததானம் பண்றவங்கதான். இது ரமலான் நோன்பு காலம் என்பதால், நாங்க ரத்தம் கொடுத்தது பரபரப்பா ஆயிடுச்சு. நோன்புக் காலத்தில் அதிகாலை நாலரை மணிக்கே சாப்பிடணும், அதன்பிறகு மாலை ஆறு மணி வரை எச்சிலைகூட அதிகம் விழுங்ககூடாதுனு நோன்பை உறுதியா கடைபிடிக்கச் சொல்வாங்க. நாங்களும் அப்படிதான் முறையா நோன்பிருந்து வந்தோம். ஆனா, `லோகநாயகி உயிர் பெரிசா, நோன்பு பெரிசா'னு யோசிச்சப்ப, எங்களுக்கு, 'லோகநாயகி உயிர்தான் பெரிசு'னு தோணுச்சு. அதனால், நோன்பை முடித்துக் கொண்டு, லோகநாயகிக்கு தேவையான ரத்தத்தை வழங்கினோம். முதல்முறையா நோன்பில் இருந்து விலகி இருக்கிறோம். அது இரண்டு உயிர்களுக்காக என்னும்போது, மகிழ்ச்சிதான். அந்த அல்லாவும் இதைதான் விரும்புவார்'' என்றார் திருப்தியுடன். 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe