ஹுதா உமர்.
சிங்களக் கடும்போக்குவாதிகள் கேட்டது ஒரு அமைச்சரையும் இரு ஆளுநர்களையும் பதவி விலக்க வேண்டும் என்றுதான். ஆனால் முஸ்லிம் தலைவர்கள் அதற்கு வழங்கிய பதில் மிக அபூர்வமான ஓர் ஒற்றுமையாகும்.
சிங்கள கடும்போக்கு வாதிகள் கேட்ட மூன்று தலைகளுக்கு பதிலாக அவர்கள் 20 தலைகளை கொடுத்தமை என்பது அந்த மூன்று தலைகளையும் அவர்கள் தனிமை படுத்த விரும்பவில்லை என்பதால்தான். அந்த மூன்று தலைகளையும் நமது சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி தோற்கடிக்கும் ஒரு அரசியலுக்கு தாம் எதிரானவர்கள் என்பதனை தெரிவித்து அந்த மூன்று தலைகளுடன் தமது தோழமையை சகோதரத்துவத்தை என்பிக்கும் விதத்தில் அவர்கள் 20 தலைகளை கொடுத்திருக்கிறார்கள்.
அதைப் போலவே இம்முறையும் அவர்கள் ஐக்கியமாக நின்று ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். இந்த முடிவை எடுத்த எல்லா முஸ்லிம் தலைவர்களும் அவர்களுடைய சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாக மாற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய தலைமைத்துவத்தை பாதுகாத்துக் கொண்டு விட்டார்கள். மேலதிகமாக கதாநாயகர்கள் ஆகியிருக்கிறார்கள். அதேசமயம் ரத்தின தேரரும் ஞானசார தேரர் மற்றும் சிங்களக் கடும்போக்காளர்கள் மத்தியில் கதாநாயகர்களாக மேலெழுந்திருக்கிறார்கள். இரண்டு தேரர்களும் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக மேலெழுந்தமை என்பது தற்செயலானது அல்ல.
திடீரென்று ஏற்பட்ட ஒன்றும் அல்ல. நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நாடகத்தின் இருவேறு பாத்திரங்களே அவர்கள். சிங்களத் தலைவர்கள் தாங்கள் செய்ய முடியாத சிலவற்றை தேரர்களுக்கு ஊடாக நொதிக்க வைத்திருக்கிறார்கள் என்பதே சரி. இதில் தேரர்கள் நொதியங்களாகத் தொழிற்பட்டிருக்கிறார்கள் என்பதே சரி.
இப்படி ஒரு காலகட்டத்தில் சிறைக்குள் இருந்த ஒரு நொதியத்தை வெளியே எடுத்து சமூகத்துக்குள் விட்டமை என்பது ஒரு திட்டமிட்ட செயற்பாடுதான். அதற்கு ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. ஒரு நொதியத்தை சிறைக்குள் இருந்து வெளியில் எடுத்து விட்டார்கள். இன்னொரு நொதியத்தை கண்டியில் உண்ணாவிரதம் இருக்க வைத்தார்கள்.
இதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வலைகளை மேலும் நொதிக்கச் செய்து ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தாலும் நாடாளுமன்றத்தாலும் முடியாமல் இருந்த ஒரு காரியத்தை அவர்கள் வேறுவிதமாக செய்து முடித்தார்கள்.
பதவி விலகிய இரண்டு ஆளுநர்களையும் பதவிகளுக்கு நியமித்தது அரசுத் தலைவர்தான். கிழக்கில் தமிழ் முஸ்லிம் பதற்றத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு அவர் அதைச் செய்தார். ஆனால் அவரே நியமித்த ஆளுநர்களை அவராலேயே அகற்ற முடியாத ஒரு கட்டத்தில் மக்களை நொதிக்கச் செய்து அதன் மூலம் இரண்டு ஆளுநர்களையும் அவர்களாக விலகச் செய்து விட்டார். அதன்பின் அதே நாளில் இப்தார் நிகழ்வில் முஸ்லிம் தலைவர்களோடும் சாப்பாட்டு மேசையில் சிரித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.
ரிசாத் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட பொழுது அவை ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு எதிராக ரிசாத் பதியுதீனை ஒரு பலியாடாக பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கப்பட்டது. தொடக்கத்தில் அவை ஒரு சமூகத்துக்கு எதிரான நகர்வாகப் பார்க்கப்படவில்லை. மேலும், சமூகத்துக்குள்ளேயே ரிசார்ட் தீவிரமான நிலைப்பாட்டை கொண்டவர் என்றும் ஓர் அபிப்பிராயம் ஒரு பகுதியினர் மத்தியில் காணப்பட்டது. குறிப்பாக முகநூல் பரப்பில் துருத்திக் கொண்டு எழுதும் ஒரு இலக்கியவாதி ரிசார்ட்டை நிராகரித்தும் ஹக்கீமை அங்கீகரித்தும் பதிவுகளை இட்டிருந்தார்.
ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் அதிகம் சர்ச்சைகளுக்குள் சிக்காத விமர்சிக்கப்பபடாத ஒரே தலைமை என்றால் அது ஹக்கீம்தான்.
எனவே ரிசாத் பதியுதீனை அவருடைய சமூகத்துக்குள்ளேயே ஒரு பிரிவினர் வேறாகப் பார்க்கும் ஒரு நிலைமை சில கிழமைகளுக்கு முன் காணப்பட்டது. குண்டு வெடிப்பை அடுத்து முஸ்லிம் சமூகம் பெருமளவிற்கு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. அதன் விளைவாக ரிசாத் பதியுதீனை தீவிர நிலைப்பாடுடைய ஒரு தலைவராக ஒரு பகுதி முஸ்லிம்கள் பார்த்தார்கள். அவருடைய அரசியலுக்கும் முஸ்லிம்களின் பொது நீரோட்ட அரசியலுக்கும் இடையில் வேறுபாடு உண்டு என்று கூறுவது அத்தற்காப்பு உத்தியின் ஒரு கூறாக இருந்தது. ரிஸாட்டை வேறாக்கிக் காட்டுவது மட்டுமல்ல அதை விட ஆழமான விதங்களில் முஸ்லிம் சமூகம் அதன் தற்காப்பு அரசியலை வெளிப்படுத்தியது.
உள்ளூரில் ஒரு உதாரணத்தை காட்டுவார்கள். நாயை அடிக்கும் பொழுது அது ஒரு கட்டத்தில் நிலத்தில் மல்லாக்க கிடந்த படி தனது நான்கு கால்களையும் வானை நோக்கி உயர்த்தி தனது வயிற்றுப்பகுதியை எதிரிக்கு காட்டும். மிருகங்களின் வயிற்று பகுதி பெரும்பாலும் மென்மையானது. எல்லா உறுப்புகளை விடவும் அதிகம் மென்மையான பகுதி அது. தன்னைத் தாக்கும் எதிரிக்கு அப்பகுதியை திறந்து காட்டுவதன் மூலம் நாயானது தன்னை முழுமையாக அந்த எதிரியிடம் ஒப்படைக்கிறது என்பதே பொருள். இப்படி ஒரு பூரண சரணாகதி நிலையை நோக்கி இலங்கைத்தீவின் முஸ்லிம் சமூகம் நிர்ப்பந்திக்கப்பட்டது.
உள்ளூரில் ஒரு உதாரணத்தை காட்டுவார்கள். நாயை அடிக்கும் பொழுது அது ஒரு கட்டத்தில் நிலத்தில் மல்லாக்க கிடந்த படி தனது நான்கு கால்களையும் வானை நோக்கி உயர்த்தி தனது வயிற்றுப்பகுதியை எதிரிக்கு காட்டும். மிருகங்களின் வயிற்று பகுதி பெரும்பாலும் மென்மையானது. எல்லா உறுப்புகளை விடவும் அதிகம் மென்மையான பகுதி அது. தன்னைத் தாக்கும் எதிரிக்கு அப்பகுதியை திறந்து காட்டுவதன் மூலம் நாயானது தன்னை முழுமையாக அந்த எதிரியிடம் ஒப்படைக்கிறது என்பதே பொருள். இப்படி ஒரு பூரண சரணாகதி நிலையை நோக்கி இலங்கைத்தீவின் முஸ்லிம் சமூகம் நிர்ப்பந்திக்கப்பட்டது.
அதன் விளைவாக படித்த நடுத்தர வர்க்க முஸ்லிம் பெண்கள் வெசாக் பெருநாளின் போது வெசாக் கூடுகளை பகிரங்கமாக கட்டினார்கள். கிளிநொச்சியில் பள்ளிவாசல்களில் யுத்த வெற்றி நாளையொட்டி நடந்த பிரார்த்தனைகளில் கொல்லப்பட்ட படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெரும்பாலான பள்ளிவாசல்களில் முஸ்லிம் மதகுருக்கள் பிரார்த்தனை முடிந்த பின் தீவிரவாதத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று காட்டும் விதத்தில் ஊர்வலங்களை ஒழுங்கு படுத்தினார்கள். முஸ்லிம் சமூகத் தலைவர்கள் பத்திரிகையாளர் மாநாடுகளை வைத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தாங்கள் தீவிரவாதிகளை குறித்து போதிய தகவல்களை அரசாங்கத்துக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்கும் வழங்கியதாக தெரிவித்தார்கள்.
இவை மட்டுமல்ல இதற்கும் ஒருபடி மேலே சென்று சாய்ந்தமருதில் ஒளிந்திருந்த தீவிரவாதிகளை பற்றிய தகவல்களை வழங்கியவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சன்மானத்தை அவர்கள் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கினார்கள். கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களை மார்க்க முறைப்படி அடக்கம் செய்ய மறுத்தார்கள். இவ்வாறு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்ட முஸ்லிம் சமூகம் அதன் உச்சக்கட்டமாக தீவிரவாதத்தோடு தொடர்புடைய சில பள்ளிவாசல்களை தம் கையாலேயே உடைக்கும் ஒரு நிலைமையும் தோன்றியது.
இவ்வாறு முஸ்லிம் சமூகமானது சிங்கள பௌத்தர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவும் சிங்கள பௌத்தர்களைச் சீண்டக் கூடாது என்பதற்காகவும் சிங்கள பௌத்தர்களோடு அனுசரித்துப் போக வேண்டும் என்பதற்காகவும் தன்னால் இயன்ற மட்டும் பூரண சரணாகதிக்கு சென்றது.
ஆனால் அப்படி ஒரு நிலைக்கு சென்ற பின்னரும் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதமானது ஞானசார தேரரை விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே அவர் சிங்கள பௌத்த உணர்வுகளை நொதிக்கச் செய்து விட்டார்.
இதன் விளைவாக முஸ்லிம் தலைவர்கள் ஐக்கியப்பட்ட ஒரு முடிவுக்கு போகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தனிமைப்படுத்தாது அவர்களுடன் தோழமையைக் எண்பிக்கும் விதத்தில் எல்லா முஸ்லிம் தலைவர்களும் அரசாங்கத்தில் தாங்கள் வகிக்கும் பொறுப்புக்களை துறப்பது என்று முடிவெடுத்தார்கள்.
ஆனாலும் இலங்கை முஸ்லிம் யதார்த்தத்தின்படி தென்னிலங்கையில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் இணக்க அரசியலை செய்யாவிட்டால் முஸ்லிம் மக்களுக்கு எதிர்காலம் கிடையாது.
வடக்கு கிழக்குக்கு வெளியே கிட்டத்தட்ட 70 வீதமான முஸ்லிம்கள் சிங்கள மக்கள் மத்தியில் கரைந்து வாழ்கிறார்கள். அங்கே அவர்கள் தமது பொருளாதாரத்தையும் நிலையான நலன்களையும் பதவி நிலைகளையும் சமூக ஸ்தானங்களையும் பாதுகாத்து கொள்வதாக இருந்தால் ஏதாவது ஒரு சிங்களக் கட்சியுடன் இணக்க அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
எதிர்காலத்திலும் இதைத்தான் அவர்களால் செய்ய முடியும். சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக தமிழ் மக்களோடு கூட்டுச்சேர்ந்து ஏனைய முற்போக்கு சக்திகளையும் இணைத்துக் கொண்டு ஒரு மூன்றாவது அணியை முஸ்லிங்களால் உருவாக்க முடியுமா?
மூன்றாவது அணி எனப்படுவது பெரும்பாலும் ஒரு மாற்று அணி தான். ஒரு மாற்று அணியை முன்னெடுப்பது என்று சொன்னால் பிரதான நீரோட்டத்தோடு முழுமையாக ஒன்றிக்க முடியாது. அதாவது பிரதான நீரோட்டத்துக்கு உரிய பொருளாதார செயற்பாடுகளிலிருந்து ஏதோ ஒரு கட்டத்தில் விலகி வர நேரிடலாம். ஆனால் பெருமளவுக்கு சந்தை மைய சமூகமாக காணப்படும் முஸ்லிம்கள் அப்படி ஒரு முடிவை எடுப்பார்களா?
முஸ்லிம்கள் பூர்ண சரணாகதிக்குப் போன பின்னரும் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் அவர்களுடைய வயிற்றில் ஏறி மிதிக்கும் ஒரு போக்கு தொடர்கிறது. ஆனால் அதை முழுமையாக எதிர்க்கும் ஒரு அரசியல் போக்கை உருவாக்க முஸ்லிம் தலைவர்கள் முன்வருவார்களா?
எதுவாயினும் அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதம் முஸ்லிம் தலைவர்களை ஐக்கியப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் முஸ்லிம் தலைவர்கள் அவர்களுடைய சமூகத்தில் கதாநாயகர்களாக மேலெழுந்திருக்கிறார்கள். அதேசமயம் தேரர்கள் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் கதாநாயகர்களாக மேலெழுந்திருக்கிறார்கள்.
அதாவது இலங்கை இன ரீதியாக பிளவுண்டிருக்கிறது என்று பொருள்.
இப்படிதான் அந்த கனவு தொடர்கிறது. ஆனால் பலிக்காது.