புலிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான ஒப்பந்தமும், அதனால் விழித்துக் கொண்ட சிங்கள தரப்பினர்களும்.
கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் முஸ்லிம் தரப்புக்கிடையில் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. அப்போது தமிழர்களுக்காக தெற்கு இனவாதிகள் முதலைக்கண்ணீர் வடித்து முடிவுற்ற சூழ்நிலையில் இந்த கட்டுரை அவசியமானதொன்றாகும்.
அந்த உடன்படிக்கையின் காரணமாக சிங்கள ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டதுடன், தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் நிரந்தர பகைமையை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தினை தோல்வி அடைய செய்வதற்கான பல தந்திரோபாயங்களை மேகொள்ள ஆரம்பித்தார்கள்.
தமிழ் - முஸ்லிம் இனக்கலவரத்தை தூண்டுவதற்கு காரணமாக அமைந்த இந்த ஒப்பந்தம் பற்றி இன்றைய இளைய சமுதாயத்தினர் எதுவும் அறியாமல் இருப்பதுடன், பலர் இதனை மறந்துள்ளார்கள்.
விடுதலை புலிகளுக்கும், வடகிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப் படையினர்களுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சென்னை நகரத்தில் புலிகளுக்கும் முஸ்லிம் தரப்பினர்களுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு கூட்டறிக்கையும் வாசிக்கப்பட்டது.
தாயகத்தில் தமிழர்கள் எவ்வாறு அரசியல் உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிக்கின்றார்களோ, அதேபோல் முஸ்லிம்களும் அனுபவிக்க முழு உரிமையும் உடையவர்கள்.
முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்கள் அச்சம், பயம், சந்தேகமின்றி வாழ்வதற்கான அனைத்து உத்தரவாதத்தினையும் புலிகள் சட்டரீதியாக உறுதிப்படுத்துவார்கள் என்றும்,
கிழக்கில் 33 வீதமாக இருந்த முஸ்லிம்கள், வடகிழக்கு இணைப்பின் காரணமாக 18 வீதமாக குறைக்கப்பட்டார்கள். அதனால் மாகாணசபையில் 30 வீதத்துக்கு குறையாத பிரதிநித்துவத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவதுடன், அமைச்சரவையில் இடம் வழங்கப்படுவதற்கும் சட்ட ஏற்பாடுகளை செய்தல்.
அரச காணிப்பங்கீட்டில் கிழக்கில் 35 வீதத்துக்கு குறையாமலும், மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்துக்கு குறையாமலும், வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 5 வீதத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
கல்வியில் சமவாய்ப்புக்கள் பேணப்படுகின்ற அதேநேரம், விகிதாசாரப்படி வேலை வாய்ப்புக்களை வழங்குவதுடன், முஸ்லிம்களுக்காக தனியான இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
வடகிழக்கு மாகாணசபையில் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகளை செய்தல் என்றும்,
தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினை களையும் பொருட்டு ஒரு குடியகல்வு கொள்கையினை உருவாக்குதல்”
1988 ஏப்ரல் மாதம் 15,16,19 ஆகிய திகதிகளில் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு இறுதியில் 21.04.1988 திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு கூட்டறிக்கையும் வாசிக்கப்பட்டது.
பதினெட்டு (18) அம்சங்களைக்கொண்ட இந்த ஒப்பந்தத்தில் விடுதலை புலிகளின் சார்பில் “கிட்டு” என்று அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்னகுமாரும், முஸ்லிம்கள் சார்பில் எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்களும் கையொப்பமிட்டார்கள்.
இந்த ஒப்பந்தத்துக்கு பின்பு பல முஸ்லிம் இளைஞ்சர்கள் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டு ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதன்பின்பு 1990 இல் புலிகளுக்கும் பிரேமதாசாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடையும் வரைக்கும் புலிகள் இயக்கத்தினர் முஸ்லிம்களுக்கு எதிராக செயப்படவில்லை.
எனவே தமிழர்களின் போராட்டத்தில் முஸ்லிம்களை இணையவிடாது தடுத்து இரு சமூகங்களுக்கிடையில் இனக்கலவரத்தினை தூண்டுவதற்கு அரச இயந்திரங்கள் மேற்கொண்ட தந்திரோபாயங்களை எதிர்வரும் காலங்களில் எதிர்பாருங்கள்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது