(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை மாநகரின் வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதில் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விடக் கூடாதென காரைதீவு பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேசசபை சிரேஷ்ட உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
இதில் கல்முனை பிரதேசசெயலக தரமுயர்வை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின பிரதேச சபை பெண் உறுப்பினர் ஜெயராணியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,
கல்முனை மாநகரம் முஸ்லிம்களும் தமிழர்களும் சேர்ந்து வாழுகின்ற ஒரு பிரதேசம். இப்பிரதேசத்தில் 30 சதவீதமாக வாழுகின்ற தமிழ்மக்களுக்கு 29 கிராமசேவகர் பிரிவுகள் காணப்படுவதுடன் 70 சதவீதமாக அங்கு வாழுகின்ற முஸ்லிம் மக்களுக்கு அதே 29 கிராம சேவகர் பிரிவுகளும் காணப்படுகின்றன. இது அங்கு வாழுகின்ற முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.
அடுத்து கல்முனை நகரத்திலுள்ள 90 சதவீதமான வியாபார நிலையங்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. இந் நகரம் 3 தமிழ் கிராம சேவகர் பிரிவுகளினுள் கொண்டுவரப்பட்டு, உள்ளூராட்சி வட்டாரப்பிரிப்பில் மாநகர சபையின் 12ஆம் வட்டாரத்தினுள் இம்மூன்று பிரிவுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறுஉப பிரதேச செயலகம் பிரிக்கப்படுகின்ற போது முஸ்லிம்களுக்கு அநீதி வழங்கப்பட்டுள்ளது.
கல்முனையில் வாழும் 70 சத வீதமான முஸ்லிம்களுக்கு 40 வீதமான நிலமும் 30 வீதமான தமிழ் மக்களுக்கு 60 வீதமான நிலமும் அமையப் பெற்றுள்ளது. முஸ்லிம்களின் வயல் காணிகள் கூட, தமிழ் கிராம சேவகர் பிரிவுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் 60 சதவீதம் தமிழ் மக்களும் 40 சதவீதம் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நாங்கள் நிந்தவூர் பிரதேச சபையிலிருந்து காரைதீவை பிரதேச சபையாக பிரிக்கின்றபோது முழு ஒத்துழைப்புடன் தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ முடியும். இன ஐக்கியத்துடன் வாழ முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக பிரதேச சபையை உருவாக்கினோம். அதேபோன்று காரைதீவு மட்டுமல்ல, நாவிதன்வெளி பிரதேச சபையாக உருவாக்கம் செய்கின்ற போது கூட எங்களுடைய பெரும் அரசியல்வாதிகள் அந்த கல்முனை மாநகரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காரங்கிரஸின் பெரும் தலைவர் அஷ்ரப் அமைச்சராக இருக்கின்ற போது பிரிவுகள் நடைபெற்றன. அது அவர்களுடைய ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
கல்முனை வடக்கு தமிழ் உப செயலக உருவாக்கத்தின் போது நிறைய அநியாயங்கள் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ளன. இந்த அநியாயங்கள் சீர்செய்யப்பட்டு தமிழ் - முஸ்லிம் உறவினை பாதிக்காத வகையில் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டுமே தவிர, மூன்றாம் தரப்பு தலையீட்டுடன் பறித்தெடுக்கும் இந்த செயற்பாட்டினை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.