Ads Area

திருமணம் முடிக்காத வாலிபர்களுக்கான போட்டி நிகழ்ச்சியின் கேள்விகளுக்கானபதில்கள்

1.மூஸா நபியின் மாமனார் தனது மகளை மூஸா நபி திருமணம் முடிப்பதானால் எவ்வளவு 'மஹர்' கொடுக்க வேண்டும் அல்லது அந்த மஹருக்குப் பதிலாக என்ன செய்யவேண்டும் என்று நிபந்தனை விடுத்தார் ?

8 வருடங்களுக்கு தனது தனது ஆடுகளை பராமரிக்க வேண்டும். அதைப் 10 வருடங்களுக்கு நீடிப்பது உங்களைப் பொறுத்தது 

2.குர்ஆனின் கட்டளைப்படி சொத்துப் பங்கீட்டில் ஒரு ஆண் பிள்ளைக்கு எவ்வளவு கொடுக்கப்படவேண்டும். ஒரு பெண் பிள்ளைக்கு எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் ?

ஆண் பிள்ளைக்கு மூன்றில் இரண்டு பங்கு 
பெண் பிள்ளைக்கு மூன்றில் ஒரு பங்கு 

3. இரண்டாவது கேள்விக்கு நீங்கள் அளித்துள்ள பதிலின்படி உங்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவர் அப்படி ஒரு பங்கீட்டை  செய்திருக்கின்றாரா ? அப்படி செய்தவரை ஆதாரத்துடன் காட்டினால்  அவருக்கு ஒரு ரீ சேட் இலவசமாக வழங்கப்படும்.

எனக்குத் தெரிந்தவரை யாரும் அப்படி கொடுத்ததில்லை 

4. 1) "அழகுள்ள பெண்" 
 2)  "அந்தஸ்துள்ள பெண்"
3) "பணவசதி படைத்த பெண்"         
 4) "மார்க்கப்பற்றுள்ள பெண்"
இந்த நான்கில் யாரை திருமணம் முடித்தால் நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்று றஸூலுல்லாஹ்  சொன்னார்கள் ?

மார்க்கப் பற்றுள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் வெற்றி பெறுவீர்கள் என்று ரசூலுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள் 

5. மஹர் கொடுக்க ஒரு வசதியுமே இல்லாத ஒரு ஸஹாபியிடம் றஸூலுல்லாஹ் மஹராக எதைக் கொடுக்கச் சொன்னார் ?

தான் மனனம் செய்துள்ள குர்ஆன் ஸூராக்களையாவது மஹராக கொடுக்கும்படி சொன்னார் 

6. கலீபா உமருடைய காலத்தில் ஒரு நாள் மதீனாவில் கலீபா உமரும் அவருடைய நண்பரும் நள்ளிரவில் ரோன்து போய்க்கொண்டிருந்த சமயத்தில் கலீபா உமர் அவர்கள் களைப்படைந்து ஒரு வீட்டின் மதில் ஓரமாக உட்கார்ந்து சாய்ந்து கொண்டிருந்த வேளையில் அந்த வீட்டிலிருந்து இருவர் பேசிக்கொள்வது கலீபா உமர் அவர்களுக்கும் அவரது நண்பருக்கும் கேட்கின்றது.
மகளே ! எழுந்து அந்தப்பாலை தண்ணீருடன் கலந்து விடு
அதற்கு அந்த மகள் தாயே ! நீங்கள் இன்று அமீருல் முஃமினீன் இட்ட கட்டளையை கேட்கவில்லையா ?
அதற்கு தாய் : அது என்ன ?
மகள் : "தண்ணீருடன் பாலை கலக்க வேண்டாம்"  என்று சத்தமாக உரத்த குரலில் சொல்லும்படி ஒருவரை கலீபா உமர்  கட்டளையிட்டதை.
அதற்கு தாய் : "எழுந்து பாலைத்தண்ணீருடன் கல".  நீ இருக்கும் இடத்தில் உமர் உன்னை பார்த்துக் கொண்டா இருக்கின்றார் ?
அதற்கு மகள் தாயிடம் சொன்னார்: என்னை கலீபா உமர் பார்த்துக் கொண்டிருக்கவில்லை ஆனால் உமறைப் படைத்த அந்த அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
இதைக் கேட்ட கலீபா உமர் என்ன செய்தார் ? இந்த மகளுக்கு நடந்த கதி என்ன?  இந்த சம்பவத்தின் முடிவு என்ன ???

கலீபா உமர் தனது மகன்களில் ஒருவரை அந்தப் பெண் பிள்ளையை திருமணம் முடிக்குமாறு வேண்டினார். உமரின் மூன்றாவது மகன் ஆஸிம் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
உமரின் மகன் ஆஸிமுக்கும் அந்தப் பெண்ணுக்கும் பிறந்த பெண் குழந்தையின் மகன் தான் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (இவர்தான் 2 வது உமர் என்று அழைக்கப்பட்டவர்

7. "மாமனாரிடம் பிடுங்கியதை மகள் வழியில் பறி கொடுப்பாய்" என்ற புது மொழியின் சரியான அர்த்தம் என்ன ?

மாமனாரிடம் சீ -தனமாக வாங்கியதை அனைத்தையும் உனக்கு ஒரு மகள் பிறக்கும் போது அவளுக்கு நீ சீ -தனமாகக் கொடுக்க வேண்டி வரும் 

8. "மாமனார் தந்த காணி"
 "மாமனார் தந்த காசு"
  "மாமனார் தந்த வாகனம்"
  "மாமனார் தந்த நகைநட்டு"
 "மாமனார் தந்த வீடு"
"மாமனார் தந்த கட்டில்"
"மாமனார் தந்த மகள்"
ஆஹா ! இந்த யதார்த்தத்தைக் கேட்கும்  போது சும்மா அதிருதில்ல. .....      உங்கள் உள்ளத்தில் உண்மையில் உதிர்க்கும் உணர்வுகள் என்ன??

"வெட்கம்" ஆனால் ஊரோடு ஒத்து ஓடுகின்றேன் என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொள்கின்றேன் 

9. இப்படி, சீ -தனம் வாங்கி செய்யும் திருமணத்தின் "அழைப்பிதழை" இன்று றஸூலுல்லாஹ் உயிருடன் இருந்தால் அதை அவருக்கு உங்களால் கொடுக்க முடியுமா ?

எப்படி எந்த முகத்துடன் கொடுக்க முடியும் 

10. பல லட்சக்கணக்கில் மாமனாரிடம் சீ -தனமாக வாங்கிவிட்டு 101 ரூபா, 501 ரூபா, 1001 ரூபா என்று கொடுக்கும் மஹர் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா?

இல்லவே இல்லை 

11. 10ம்  கேள்விக்கு உங்கள் பதில் "இல்லை" என்றால் அப்போ இஸ்லாமிய முறைப்படி எவ்வளவு மஹர் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கவேண்டும் ?

தனது வசதிக்கேற்றவாறு மஹரை கொடுப்பதுதான் இஸ்லாமிய சட்டம்

12. இலங்கையில் சிங்கள இளைஞர்கள் கூடுதலாக சீ-தனம் வாங்குகின்றார்களா ? முஸ்லிம் இளைஞர்கள் கூடுதலாக சீ -தனம் வாங்குகின்றார்களா ?

முஸ்லிம் இளைஞர்கள்தான் இலங்கையில் கூடுதலாக சீ -தனம் வாங்குகின்றார்கள் 

13. "சீதனம்" -  "சீ "- தனம்
  "வரதட்சனை" - "வரும்" தட்சனை
"கைக்கூலி" - கையால் கொடுக்கப்படும் "கூலி"
"கொடுப்பனவுகள்" - "கொடுக்கப்படும் கனவுகள்"
இந்த வார்த்தைகளே "கேவலமாக" இருக்கும்போது இதை வாங்கி அனுபவிப்பவர்களுக்கு அது "கேவலமாக" தெரியாமல் இருப்பதற்கான காரணம் என்ன ?

"பெற்றார் எப்படியோ பிள்ளைகள் அப்படி"

14. "நாங்கள் ஒன்றும் சீதனமாகக் கேட்கவில்லை நீங்கள் உங்கள் மகளுக்குக் கொடுக்கவேண்டியதை கொடுங்கள்" என்று நாசூக்காக நாகூசாமல் கூறும் பெற்றோரை தமிழில் எப்படி அழைப்பது ?

"நயவஞ்சகர்கள்" என்று 

15. ராத்தா, தங்கைமாருடன் பிறந்த ஒரே காரணத்துக்காக அவர்களை கரை சேர்க்க வேண்டும் என்பதற்காக  தன் வாலிபத்தைத் தொலைத்து வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் வாலிபர்களுக்காக ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் உங்களால் செய்யக்கூடிய சிறந்த செயற்பாடு என்ன ?

அவர்களுக்காக  அல்லாஹ்விடம்  'துஆ' கேட்பது 

16. "டாக்டர் மாப்பிள்ளை" என்று நேத்ரா ரீவீயில் ஒளிபரப்பாகிய கதையில் டாக்டரின் வாப்பாவாக நடித்து  "சீ -தனக்கொடுமைக்கே  ஒரு புதிய இலக்கணம்' வகுத்த சம்மாந்துறை நடிகரின் பெயர் என்ன ? இதை அறிய "டாக்டர் மாப்பிள்ளை" என்ற கீழே உள்ள  வீடியோ லிங்கை பார்க்கவும்.
https://www.facebook.com/SammanCommunity/videos/1138858382821131/

'கலைக்குரல்' அமீர் 

17. இன்றைய "சீதனச்சந்தையில்" ஒரு அரசாங்க உத்தியோகத்தரின் பெறுமதி என்ன ? காணி, வீடு, காசு எவ்வளவு ?

குறைந்தது ஒரு வீடு, காசு, சில இடங்களில் 3 ஏக்கர் காணி 

18. ஒரு சில பள்ளிவாசல்களைத்தவிர, பெரும்பாலான பள்ளிவாசல்களில் அடிக்கடி "சீதனத்தின் சீர்கேட்டைப் பற்றி" குத்பா பிரசங்கங்களில் உலமாக்கள் பேசாமல் இருப்பதற்கான காரணம் என்ன ?

அவர்களும் சீ-தனம் வாங்கி திருமணம் செய்ததுதான் 

19. சில உலமாக்களும் "சீ-தனம்" வாங்குகின்றார்கள். பல உலமாக்கள் "சீ-தனம்" வாங்கி நடாத்தும் கல்யாண வைபவங்களில் சர்வ சாதாரணமாக கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள் இவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன ?

சீ-தனம் வாங்கி திருமணம் செய்யாதீர்கள். சீ -தனம் வாங்கி முடிக்கும் திருமணங்களில் எக்காரணத்தைக் கொண்டும் பங்கு கொள்ளாதீர்கள் 

20. "சமூகச் சீர்கேடான" இந்த சீதனப் பிரச்சினையை எப்படி நமது சமூகத்தில் இருந்து அடியோடு ஒழித்துக் கட்டலாம்  உங்கள் ஆலோசனைகள் என்ன ?

மிகவும் சுலபம். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய திருமண வழிமுறையை சரியான முறையில் பின்பற்றல்

மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு யாருமே பதில் அளிக்காததால் நாம் பரிசாகக் கொடுக்கவிருந்த அனைத்து ரீ சேட்டுக்களையும் சீதனத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களுக்கு கொடுக்கத் தீர்மானித்துள்ளோம்.

நாங்கள் கேட்ட போனஸ் கேள்விக்கும் யாரும் பதிலளிக்கவில்லை. அதற்கான பதிலை அறிய தொடர்ந்து சம்மாந்துறை 24 இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe