Ads Area

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனும் ஜனாதிபதியினால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை நாட்டின் பிரஜையாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் வரவேற்கின்றேன். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் ஏற்பாட்டில் கம்பெரலிய திட்டத்தின் கீழ் 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வசதி குறைந்த குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்பு மற்றும் வீட்டு திருத்தப் பணிகளுக்கான நிதி என்பன வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம்(05) சம்மாந்துறை அல்-மர்ஜான் தேசிய பாடசாலையின் எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவிச் செயலாளர் எம்.எம்.ஆசீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவணை வேகமாக அதிகரித்து வருகின்றது. இலட்சக் கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையைக் காவுகொள்ளும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்கார்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

நாட்டில் போதைப்பொருள் பாவணையின் காரணமாக ஆண், பெண் உட்பட 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறைக்குச் செல்கின்றனர். ஒரு இனத்தை அழிப்பதற்கும் போதைப்பொருள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

ஆகவே, போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நியாயப்பாடாகும். இதுவரவேற்கத்தக்க விடயமாகும். இதனை அமுல்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். என்றார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe