சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைமையிலான சுயேச்சை குழுவினர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதுதான் நேற்றைய தலைப்பு செய்தியாகும்.
அரசியல் என்னும்போது இவைகளெல்லாம் ஆச்சர்யப்பட கூடிய விடயமல்ல. காலச் சுற்றோட்டத்தில் சாதாரணமாக நடைபெறுகின்ற விடயங்களாகும்.
இவ்வாறெல்லாம் செய்தவர்கள் தனியான சபை கிடைக்காமலேயே திடீரென தலைவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தது தவறு என்று விமர்சித்தால் அவர்களுக்கு அரசியல் தெரியாது என்றுதான் அர்த்தமாகும்.
இந்த சந்திப்பானது ஹோட்டல் ஒன்றில் அல்லது வேறு பொதுவான ஓர் இடத்தில் நடைபெற்றிருந்தால் இதனை எவராலும் கேள்விக்குட்படுத்தியிருக்க முடியாது. ஏதாவது நியாயம் ஒன்றினை சுயட்சை குழுவினர் கூறியிருப்பார்கள்.
இதுதான் நேற்றைய சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு கிடைத்த வெற்றியாகும். தலைவருக்கு வெற்றி என்பதற்காக சுயர்ச்சை குழு உறுப்பினர்கள் தோல்வியடைந்தார்கள் என்பது அர்த்தமல்ல. சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைமையில் நடைபெற்ற போராட்டம் நாடுதழுவிய ரீதியில் பேசப்பட்டது. இந்த பிரச்சினை பற்றி தெரியாதவர்கள் யாருமில்லை.
தனியான சபை பிரகடனப்படுத்தப்படாமல் இருதரப்பினர்களும் வரலாற்றில் ஒருபோதும் முகம் பார்த்து சிரிக்கவோ, கைகுலுக்கவோ, ஒன்றாக இருந்து தேநீர் அருந்தவோ மாட்டார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்களின் எதிர்பார்ப்புக்கு இடிவிழுந்ததைப் போலவே இந்த சந்திப்பு நடந்தேறியுள்ளது.
இதில் இன்னொரு விடயத்தையும் அவதானிக்க வேண்டும். அதாவது மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் அமைச்சராக அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்குமா என்ற கேள்வியும், பலமான சந்தேகமும் எழாமலில்லை.
எனவே எது எப்படி இருப்பினும், இந்த சந்திப்பானது சமூகத்தின் ஒற்றுமையை விரும்புகின்றவர்களுக்கு மகிழ்ச்சியையும், வெற்றியையும் தந்துள்ளதுடன்,
சமூகத்துக்குள் பிரிவினையை உண்டுபண்ணி அதில் குளிர்காய நினைப்பவர்களுக்கு இது தோல்வியாகும். அத்துடன் அரசியல் என்றால் என்ன என்பதற்கான படிப்பினையும் இதில் உள்ளது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது