Ads Area

வங்கிக் கடன்களால் நடுத்தெருவில் நிற்கும் மற்றும் தற்கொலை செய்யும் அவலம்.

வங்கியால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பயனடைந்ததைவிட பாதிப்புகள் தான் அதிகம் அடைந்துள்ளனர். இதனால் தற்கொலையும் செய்து வருகின்றனர். இதனை வங்கிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்நபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது, 

ஆசைகளுடனும், கனவுகளுடனும் நாங்கள் எங்கள் வாழ்வை நகர்த்துவதற்காக வங்கிக் கடனைப் பெற்றோம். போரிற்கு பின்னாளில் நாங்கள் வங்கிகளைத் தேடிச் சென்றதுண்டு. வங்கிகளும் எங்களை தேடி வந்ததுண்டு. இதனால் இன்று வங்கிகளால் மக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். வங்கிகளில் பெற்ற கடனைச் செலுத்த முடியாமல் தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றன.

மக்களுக்கு உதவி செய்ய வந்திருப்பதாகச் சொல்லி மக்களுக்கு ஆசைவார்த்தை கூறி அவர்களுக்கு பணத்தை கொடுத்து அவர்களை கடனாளியாக்குகிறீர்கள். கடனைப் பெற்ற வியாபாரி தனது வியாபாரத்தில் நட்டம் அடைந்தால் அவனால் வட்டியைச் செலுத்த முடியாமல் போகிறது. 

இது பற்றி வங்கி கடன் பெற்றவர் விடயத்தில் வட்டியை செலுத்துவதற்கான காலத்தைக் கொடுக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும். வட்டிக்கு வட்டி என்று வட்டி முதலாகி வட்டி முதலையும் பெற்ற கடனையும் செலுத்துமாறு கடன் பெற்றவரை வற்புறுத்துகிறது.

இதனால் எனது 20 கோடி பெறுமதியான ஹோட்டல் ஒன்றை 2 கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கு விற்று அதே வங்கிக்கு கொடுத்துவிட்டு இன்று ஒன்றுமில்லாமல் நிற்கிறேன். நியாயம் கேட்டு வங்கிமீது நான் வழக்குத் தொடுத்துள்ளேன். எனது வியாபாரத்தை இழந்து நிற்கிறேன். ஆனால் நான் தற்கொலைக்கு போகவில்லை.

எனக்கு மனித சக்தி இருக்கிறது. என்னை காப்பாற்றிக் கொள்வதற்கு எனக்கு மனோதிடம் இருக்கிறது. இது எல்லோரிடமும் இருக்காது. தயவு செய்து வங்கிகள் கடன் வழங்க முதல் அவர்களின் நிலமையைப் பாருங்கள் என்றார்.

தமிழ்வின்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe