Ads Area

குழந்தைகள் பயமின்றி அறுவை சிகிச்சைக்குச் செல்ல சிறந்த வழியை ஏற்படுத்திய மருத்துவமனை.

குழந்தைகளை அறுவை சிகிச்சைக்குத் தயார்செய்வது மிகவும் சவாலான காரியம். இதற்குத் தீர்வுகாண கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனை சிறந்த வழியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் பெரியவர்களுக்கே சிறிய மனத்தடைகள் ஏற்படும். குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அதனால்தான் பல அம்மாக்கள் சாப்பாடு ஊட்டும்போது, `ஒழுங்கா சாப்பிடல... அப்புறம் டாக்டர் வந்து ஊசி போட்டுருவாரு' என்று பயமுறுத்திச் சாப்பிட வைப்பார்கள்.

அதிலும் குழந்தைகளை அறுவை சிகிச்சைக்குத் தயார்செய்வது மிகவும் சவாலான காரியம். அறுவை சிகிச்சை என்றால் என்னவென்றே புரிந்துகொள்ள முடியாத குழந்தைகளுக்கு பதற்றமும் பயமும் ஏற்படும். இதற்குத் தீர்வுகாண கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனை சிறந்த வழியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அறுவை சிகிச்சைக்குச் செல்லும் குழந்தைகள் மினியேச்சர் கார்களில் உட்கார வைக்கப்பட்டு, அறுவை சிகிச்சை அறை வரைக்கும் காரை ஓட்டிச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக மருத்துவமனையில் இளஞ்சிவப்பு நிறத்தில் வோக்ஸ்வாகன் பீட்டில் மற்றும் கறுப்பு நிற மெர்சிடிஸ் கார்கள் வாங்கப்பட்டுள்ளன.

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்தக் கார்களில் பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஸ்டீயரிங், mp3 பாடல், ஹெட்லைட்டுகள், திறக்கும் கதவுகள், டாஷ்போர்டு விளக்குகள் எனப் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்தக் கார்களை குழந்தைகள் அவர்களாகவே இயக்கலாம், ரிமோட் கண்ட்ரோலைக் கொண்டும் கட்டுப்படுத்தலாம்.

இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் கூறும்போது, ``இந்த இனிமையான கார் சவாரி எங்கள் சிறிய நோயாளிகளை அச்சமின்றி அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்கின்றன. குழந்தைகளின் கவலை மற்றும் மனஅழுத்தத்தைக் குறைப்பதே குறிக்கோள். பதற்றம் இல்லாமல் செல்லும் குழந்தைகளைக் காணும்போது பெற்றோர்களும் நிம்மதி அடைகின்றனர்" என்று தெரிவித்துள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe