சர்ச்சைக்குள்ளான குருநாகல் டொக்டர் சாஃபி சிஹாப்தீனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவை செப்டம்பர் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
மனுதாரர் சார்பில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, திருத்தம் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கென திகதியொன்றை கோரினார். அத்துடன் மனுதாரர் தனது மனுவை வலுப்படுத்தும் வகையில் சில ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைக் கருத்திற் கொண்ட மூன்று நீதிபதிகளடங்கிய குழுவினர் இம்மனுவை செப்டம்பர் 27 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தீர்மானித்தனர்.
நீதிபதிகள் சிசிர டி ஆப்ரு, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் கே.மலால்கொட ஆகிய மூன்று நீதிபதிகளடங்கிய குழுவே நேற்று இத்தீர்மானத்தை மேற்கொண்டது.
டொக்டர் சாஃபி சார்பில் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்த சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் குருநாகலை குற்ற பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் புஸ்பலால், குருநாகலை பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பதில் பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்கிரமரட்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தார்.
மனுதாரர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னை தடுத்து வைத்திருப்பதற்கு இடைக்கால தடையுத்தரவும் கோரியிருந்தார்.
எவ்வாறாயினும் டொக்டர் சாஃபி குருணாகலை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சட்டவிரோத கைது மற்றும் சட்டவிரோத தடுத்து வைத்தல் மூலம் அடிப்படை உரிமைகளின் 12(1),12(2),13(1),13(2) மற்றும் 14(1) ஆகிய சரத்துக்கள் மீறப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.
மேலும் டொக்டர். சாஃபியின் கைதின்போது பிரதிவாதிகள் தவறாக, தன்னிச்சையாக மற்றும் சட்டவிரோதமாக நடந்து கொண்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மாதாந்த சம்பளம், தனியார் ஆஸ்பத்திரிகளில் உழைத்த வருமானம் மற்றும் ஏனைய வருமானங்களுக்கூடாகவே டொக்டர். சாஃபி பணம் மற்றும் சொத்துக்களை சேர்த்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கை பிரசவத்தின்போது தாயின் பலோப்பியன் குழாயை கண்டறிவது இயலாத காரியமென்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னரும் 2019 மே 23 ஆம் திகதிக்கு முன்னரும் டொக்டர் சாஃபியின் வீடும் கோல்ட்மெட் டயக்ெனாஸ்டிக்ஸ் மருத்துவ நிலையம் மற்றும் ஆய்வுகூடம் என்பன மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களின்போது பொலிஸாரால் சோதனையிடப்பட்டபோதும் அவருக்கு எதிராக எவ்வித குற்ற அல்லது பயங்கரவாத செயற்பாடுகள் முன்வைக்கப்படவில்லை. சிங்கள இனத்தைச் சேர்ந்த தாய்மாருக்கு சிசேரியன் செய்யும்போது குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது. இது டொக்டரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. சிசேரியனானது சத்திரசிகிச்சை கூடத்தில் ஆகக்குறைந்தது ஆறு பேர் முன்னிலையில் நடத்தப்படும். குழந்தையையும் தாயையும் காப்பாற்றுவதற்காக விரைவாக நடத்தப்படும் இந்த சத்திர சிகிச்சையின்போது குற்றம்சுமத்தப்பட்டுள்ள மோசடிகளை முன்னெடுப்பது இயலாத காரியமென்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லக்மால் சூரியகொட

