காத்தான்குடி பள்ளிவாயல்களில் படுகொலை செய்யப்பட்ட ஷுஹதாக்களின் 29 ஆவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணியும் பிரகடனமும்..
(எம்.பஹ்த் ஜுனைட்)
03.08.1990 அன்று காத்தான்குடி மீரா பெரிய ஜும் ஆப் பள்ளிவாயல், மஸ்ஜிதுல் ஹுசைனியா ஆகிய இரு பள்ளிவாயல்களிலும் இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது பாசிசப் புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவர்கள், வயோதிபர்கள் உள்ளடங்கலாக 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட தினத்தின் 29 ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வும் கவனயீர்ப்புப் பேரணியும் சனிக்கிழமை (3) காத்தான்குடியில் இடம்பெற்றது.
காத்தான்குடி பொதுமக்கள் இத் தினத்தில் வர்த்தக நிலையங்களை மூடி நிகழ்வில் பங்கெடுத்ததுடன் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் மற்றும் முஸ்லிம்களின் தியாகங்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டும் வகையிலான பதாதைகளை ஏந்தியவாறு பிரதான வீதியில் இவ் கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஷுஹதாக்கல் தின நிறைவேற்றப்பட்டது. அப்பிரகடனத்தில்
*யுத்த காலங்களில் பறிக்கப்பட்ட மற்றும் இழக்கப்பட்ட முஸ்லிம்களின் வயல் நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகளை மீள ஒப்படைப்பதற்கான முஸ்தீபுகளை உடனடியாக ஆரம்பித்தல்.
*யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்றும் இலங்கையில் ஏனைய இடங்களிலி இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
*முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல்
*புதிய அரசியல் யாப்பு ஒன்று வருமாக இருந்தால் அது முஸ்லிகளுக்கான அரசியல் தீர்வையும் உள்ளடக்கி இருப்பதனை உறுதி செய்தல்
*யுத்தகாலத்தில் அறுமுகப்படுத்தப்பட்ட தீவிரவாத எதிர்ப்புச்சட்டத்தை இல்லாதொழித்து சர்வதேச மனித உரிமைகளுக்கு பாற்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டமொன்றை உருவாக்குதல்
*அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதான அப்பாவி பொதுமக்களின் விடுதலையை உடனடியாக உறுதி செய்தல்.
*யுத்த காலத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் சிவிலியன்களுக்கு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் அங்கவீனமாக்கப்பட்டு வாழ்வில் இன்னல்களை அனுபவித்து வரும் முஸ்லிம்களுக்கு உரிய பொறுப்புக் கூறல்கள் வழங்கப்பட வேண்டும்.
*கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தின் போது தமிழ் ஆயுததாரிகளின் கொடூரங்கள் காரணமாகவும் பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாகவும் தங்களது பூர்வீகக் காணிகளை இழந்த முஸ்லிம்களுக்கு அக்காணிகள் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும்.
*பல பக்க பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உள்ளாகி மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் வாழ்ந்துவரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு சனத்தொகைக் கேற்ப காணிப் பங்கீடு வழங்கப்பட வேண்டும்.
*ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னரான இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக அரங்கேறும் அடிப்படை உரிமை மீறல்களை துரிதமாக விசாரித்தல்.
*ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை முஸ்லிம் சமூகம் வன்மையாக கண்டிப்பதுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் உறுதி வழங்குகின்றோம்.
போன்ற பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டது.
காத்தான்குடி தேசிய ஷுஹதாக்கல் நிறுவனம், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம் இய்யதுல் உலமா சபை, நகர சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஷுஹதாக்கல் ஞாபகார்த்த நிகழ்வில் ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், பொதுமக்கள் என அதிகமானோர் கலந்துகொண்டனர்.