வறுமையைக் காரணம் காட்டி பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியைப் பாழடித்து விடாமல், அவர்களுக்கு நல்ல வழிகாட்ட முன்வர வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் பிரத்தியோகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். சகுபீர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை ஒசாட் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை, நெய்னாகாடு அல்- அக்ஸா வித்தியாலயத்தின் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (16) பாடசாலை அதிபர் ஏ.பி. ஹிபத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரமத அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உயரிய எண்ணங்களுக்காக முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தவும், சமூகத்தின் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தவும், பெருந்தலைவர் அஷ்ரப் செய்த பங்களிப்புக்களும், அர்ப்பணிப்புக்களும் எண்ணிடங்காதவை. அது மட்டுமன்றி சமூக விடுதலைக்காகப் போராடி மற்றவர்களையும் போராட வைத்த வீரப் புருஷர்தான் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களாகும். அன்னரை இத்தினத்தில் நினைவு கூர்ந்து பிரார்த்திப்பது கட்டாயமாகும். என்றார்.
இப்பாடசாலையில் கல்விகற்கும் 88மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுக்காக நெய்னாகாடு பள்ளிவாசல் பேஷ் இமாம் முஸ்ஸமில் மௌலவி துஆப் பிரார்த்தனை நடாத்தி வைத்தார்.