வடக்கு -கிழக்கை இணைக்கப்பட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் இந்த மண்ணில் பாதுகாக்கப்படுவார்கள்.
வடக்கு -கிழக்கை இணைத்து, ஒரு மாகாணமாக ஆக்கப்பட்டாலேயே தமிழ் மக்கள் இந்த மண்ணில் பாதுகாக்கப்படுவார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
“வடக்கு கிழக்கு இணைந்தது என்பது ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. ஆகவே அந்த இணைப்பு என்பது ஒருதலைபட்சமாக தற்போது மறுதலிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த இணைப்பு கொண்டு வர வேண்டிய முக்கிய பங்கு இந்திய அரசாங்கத்திடம் நிச்சம் காணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக இந்திய அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. எனவே சர்வதேச சமூகத்தின் உறுதியான பங்களிப்பு நிச்சயம் அவசியம்” என கூறினார்.