“நான் ஒரு பப்படம் செய்யும் தொழிலை செய்யும் ஒரு தொழிலாளி.எனக்கு 3 பொம்பள புள்ளங்க சேர் அவங்கட படிப்புச்செலவுக்காக குடும்பத்திலுள்ள சிலரிடம் கடன் வாங்கியிருந்தேன்.
அவர்கள் கேட்கின்றபோது அதை அடைத்து எனதும் குடும்பத்தினதும் மானத்தை காப்பதற்காக எனது ஊரிலுள்ள நல்ல மதிப்புள்ள சிங்கள மொதலாளியிடம் எனது வேலைத்தளத்த ஈடாக வைத்து ரூ.450,000/= கைமாத்துக்கு எடுத்தேன்.
அவர் நம்பிக்கையான ஆள் என்றதாள அவர் சொன்ன டொக்கியுமெண்டுள ஒப்பம் வைச்சி கொடுத்திட்டன் ,அந்த டொக்கியுமெண்டில “சின்னக்கரய”என்று இருந்தத கண்டு “ஒங்கள்ட மோட்கேட்ஜ் தானே வைச்சேன் நான் எனது வேலைத்தளத்தை விற்கவேயில்லையே என்றேன்.ஒண்டும்” பயப்படத்தேவையில்ல நான் நீ நினைக்கிறமாதிரி ஒண்டும் செய்ய மாட்டேன் என்ன நம்பு” என்றார்.
இப்ப தவணைப்பணம் கட்டாமல் குறித்த பினான்ஸ் கொம்பனி எனது வேலைத்தளத்த வெந்தேசியில் விற்பதற்கான நீதிமன்ற கட்டளையை பெற்று எதிர்வரும் மாதம் 10ம் திகதி நடைமுறைப்படுத்தபோறானுகளாம்.எனது வேலைத்தளத்த காப்பாற்றி ஊரில என்மேல மக்கள் வச்சிருக்கிற மரியாதையை காப்பாத்துங்க சேர் என்றார்.
எனது காரியாளயத்தில் என்னிடத்தில் எனது தகப்பனாரைப்போன்ற ஒருத்தர் மேற்சொன்ன விடயங்களை கண்ணீரும் கம்பளையுமாக சொல்லி முடித்தார்.
நொத்தாரிஸ் சட்டத்தின் 31 வது பிரிவானது ஒரு நொத்தாரிஸ் ஒரு ஆவணத்தை நிறைவேற்றும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என விபரமாக சொல்லுகின்றது.
இங்கு ஈடுவைப்பதற்கான ஈட்டுறுதி(Mortgage Bond) எழுதாமல் அறுதி உறுதி (Deed of Transfer) எழுதும் விடயத்தில் நொத்தாரிசும் ஒரு கூட்டுக்களவாணியாக இருந்ததால் அவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுக்கொடுக்க முடியும்.
இவரின் தகவல்களின் அடிப்படையில், இவரை எல்லாக்கூட்டுக்களவாணிகளும் ஏமாற்றியமை தெரியவருகிறது.
இவரின் தகவல்களின் படி இங்கு குறித்த நிதிநிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் வீதியில் நின்று ஆதனத்தை பார்த்து விட்டு உடமையில் யார் இருக்கிறார் எனப்பார்க்காமல் கெட்ட எண்ணத்துடன் குறித்த மொதலாளிக்கு அதிக விலைமதித்து பணத்தை கம்பனி வழங்கியுள்ளது.ஆகவே அந்த பினான்ஸ் கம்பனியும் கூட்டுக்களவாணியின் பங்காளியாகிறது.
இவைகளை நீதிமன்றில் நிரூபித்து இவரை இந்த துன்பத்திலிருந்து நீக்குவதற்கு மிகவும் நீண்டகாலமெடுக்கலாம் அதை நாம் பார்த்துக்கொள்வோம் .
இப்போது இந்த நிகழ்வினூடாக மக்களுக்கு என்ன விடயத்தை நாம் சொல்ல வருகிறோம் என்றால், நீங்கள் உங்கள் ஆதனத்தை ஈடுவைத்து பணத்தை பெறும் போது உங்களது ஆதனத்தை ஈடுவைப்பதற்கான ஆவணமானத்தின் தலைப்பாக “சிங்களத்தில் உகஸ்கரய என்றும் தமிழில் ஈட்டுறுதி என்றும் ஆங்கிலத்தில் Mortgage Bond என இருந்தால் மாத்திரம் ஒப்பமிடுங்கள்.
கூட்டுக்களவாணிகளால் சிங்களத்தில் “சின்னக்கரய அல்லது விகுனும்கரய அல்லது இங்கிலிசில் Deed of Transfer அல்லது தமிழில் அறுதி உறுதி” என தளயங்கம் இருந்தால் அந்த ஆவணத்தில் ஒப்பமிடாதிர்கள்.
ஈடாக நீங்கள் உங்கள் ஆதனத்தை நிதி நிருவனங்களில் வைத்து தவணைப்பணம் கட்டாமல் சிறு நிலுவையிருந்தால் குறித்த நிதிநிறுவனம் வீட்டிலுள்ள சட்டிபாணைகள் ,பிரிட்ஜ்,TV,AC போன்ற பொருட்களை ஏலத்தில் விற்று தங்களது வட்டித்தாகத்தை தீர்த்துக்கொள்வார்கள்.
அறுதி உறுதியாக விற்றால் ஆண்டாண்டு காலமாக வாழந்த்த வீட்டைவிட்டு வெளியேற வேண்டிவந்து அந்த துன்பம் தாங்க முடியாமல் மாறடைப்பு வந்து உங்களது குடும்பத்தை நடுவீதியில் விட்டுட்டு நீங்கள் எமலோகம் போக வேண்டிய நிலை ஏற்படலாம்.
எனவே பணத்தை பெறுவதற்காக அவசரப்பட்டு ஆவணம் எதுவென்று பார்க்காமல் கையொப்பமிடவேண்டாம்.
சட்டத்தரணி சறூக்-கொழும்பு