Ads Area

நாட்டின் நீதித்துறைக்கு என்ன மரியாதை இருக்கிறது..??

நாட்டில் சட்டம் தமிழர்களுக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு ஒன்று பெளத்த மதகுருக்களுக்கு ஒன்று என்ற அமைப்பில் இருக்கின்றதோ என சந்தேகிக்க தோன்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றின் உத்தரவையும் மீறி செம்மலை நீராவியடி பிள்ளையார் வளாகத்தில் உயிரிழந்த பெளத்த துறவியின் உடல் தகனம் செய்யப்பட்டமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிப்பு செய்து வந்த பெளத்த துறவி இறப்பின் பின்பு அவரது உடலை கோவில் வளாகத்தில் அடக்கம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மதகுருவின் பூதவுடலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இதில் இருந்து ஒன்று மட்டும் புலப்படுகின்றது சட்டம் தமிழர்களுக்கு ஒன்று பெளத்த மத குருக்களுக்கு ஒன்று. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர். சமாதான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நம்பிக்கை வைத்துள்ளன.

ஆனால் இன்றைய நிகழ்வுகள் ஒருபோதும் நாம் ஒற்றுமையாக வாழ முடியாது என்பதை உணர்திநிற்கின்றன. கடந்த கால எமது ஆயுத போராட்டங்களும் இப்படிப்பட்ட பாதிப்புக்களினாலே ஏற்பட்டன என்பதை ஏன் பேரினவாதம் உணர்ந்து கொள்ளவில்லை.

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும் சட்டம் அனைவருக்கும் சமன் என்பதை இந்த நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்திருந்தார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe