மழை பெய்தால் மட்டுமே நிலை மாறும்; வறட்சியால் மடிந்த 200 யானைகள்!' - ஜிம்பாப்வே சோகம்
மழைபெய்தால்தான் இந்நிலை மாறும் என்று கூறும் Farawo, மழை வரும்வரை காத்திருக்காமல், தற்பொழுதே விலங்குகளைக் காக்கத் திட்டம் வகுத்துள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து ஜிம்பாப்வேயின் ஹ்வாங்க்வே தேசிய பூங்கா அதிகாரியான Tinashe Farawo கூறுகையில், ``கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து. Hwange National Park-ல் மட்டும் 200-க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. யானைகள் மட்டுமின்றி ஒட்டகச் சிவிங்கிகள், எருமை மாடுகள், கொம்பில்லா மான் இனங்கள் போன்ற விலங்கினங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
யானைகள் கூட்டமாக செல்கையில், அதன் எண்ணிக்கை குறைந்ததைக் கண்டறிந்தோம். ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் பல பறவை இனங்களும் பாதிப்படைந்துள்ளன. சில பறவைகள் குறிப்பிட்ட மரங்களில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். அம்மரங்கள் யானைகளால் அழிக்கப்பட்டுள்ளன" என்று கூறுகிறார் Tinashe Farawo. கடும் பஞ்சத்தின் காரணமாக, விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைந்துவிடுகின்றன. இவ்வாறு விலங்குகளால் மட்டும் சென்ற ஆண்டில் 33 மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். மழை பெய்தால்தான் இந்நிலை மாறும் என்று கூறும் Farawo, மழை வரும் வரை காத்திருக்காமல், தற்பொழுதே விலங்குகளைக் காக்க திட்டம் வகுத்துள்ளதாக கூறியுள்ளார்.
தென்கிழக்கு பகுதியில் உள்ள சேவ் வேலி கன்சர்வன்ஸியிலிருந்து, (save valley Conservancy) வன உயிரினங்களை வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய உள்ளோம். 600 யானைகள், சிங்கக் கூட்டங்கள், 50 எருமைகள், 40 ஒட்டகச் சிவிங்கிகள், 200 மான்கள், காட்டு நாய் கூட்டம் ஆகியவற்றை இடமாற்றம் செய்ய உள்ளோம் என்றும் Tinashe Farawo தெரிவித்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் எவ்வளவு விலங்கினங்கள் இருக்க வேண்டுமோ, அதற்கு மேலாக அபரிமிதமாக விலங்கினங்கள் உள்ளன. சுற்றுச்சூழலைச் சார்ந்து வாழும் உயிரினங்களின் வளர்ச்சியைக் கண்டுகொள்ளாமல் விட்டால், சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
போட்ஸ்வானாவைவிட அதிக யானைகளைக் கொண்ட பகுதியாக ஜிம்பாப்வே விளங்குகிறது. இங்கு 85,000 யானைகள் உள்ளன. தங்களால் யானைகளின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சமாளிக்க முடியவில்லை என்றும் யானைகளையும், அதன் தந்தங்களையும் மற்ற நாடுகளுக்கு விற்பதற்கு தயாராக இருப்பதாகவும் உயிரியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதன் மூலம் வரும் பணம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதைப்போக்க உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டில் 110 யானைகள், சீனா மற்றும் அரபு நாடுகளுக்கு விற்கப்பட்டன. அதன் மூலம் இவர்களுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தொகை உயிரினங்களின் பாதுகாப்பின் செலவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
vikatan