இதுவரை நாட்டை ஆட்சி செய்த கூட்டத்தினரை விடவும் எம்மிடம் சிறந்த நல்லறிவுள்ள குழு இருப்பதாக தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம் திஸ்ஸமஹராமை தெபரவெவ மைதானத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்பொழுது எமது நாட்டிலுள்ள மக்களுக்கு நாட்டிற்கு சிறந்ததோர் ஆட்சியை தெரிவு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனூடாக நாட்டிற்கும் மக்களுக்கும் புதியதோர் ஆட்சி கிடைக்கவுள்ளது. இது எமது நாட்டு மக்களுக்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பமல்ல. நாம் மிகவும் நீண்ட தூரம் செல்லாமல் 2015 இற்கு சென்றதால் இச்சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது. இதன்போது அன்றிருந்த ஆட்சியாளர்கள் திருட்டை நிறுத்துவார்கள் என்ற பாரிய எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. திருடர்களுக்குத் தண்டனை வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். நாட்டிலுள்ள மக்களது அன்றாட பிரச்சினைகளுக்குத் தீர்வினை பெற்றுக்கொடுத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவார்கள் என எதிர்பார்த்தார்கள். ஆனாலும் இவர்கள் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை வீணடித்தார்கள்.
இந்த இரண்டு குழுவினரும் எமது நாட்டிற்கு செய்ய முடியுமான அனைத்து அநியாயங்களையும் அழிவுகளையும் செய்து நாட்டை வறுமைக்குள் தள்ளியுள்ளார்கள். நாடு சகல துறைகளிளும் பின்னடைந்துள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான அறிவு, சக்தி, பலம் ஆகிய அனைத்தும் எம்மிடம் உள்ளன எனவும் தெரிவித்தார்