குருநாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபி நான்காயிரம் சிங்கள பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சைகளை செய்துள்ளதாக கூறி கடந்த காலங்களில் இனவாத நாடகத்தை அரங்கேற்றிய பேராசிரியர் சன்ன ஜயசுமண, அத்துரலியே ரதன தேரர் ஆகியோர் தற்போது அமைதியாக இருந்து வருகின்றனர்.
மருத்துவர் ஷாபி நான்காயிரம் சிங்கள பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்ததுடன், அது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தியது. மருத்துவர் ஷாபி, கருத்தடை சத்திர சிகிச்சையை செய்துள்ளாரா என்பதை மருத்துவ ரீதியில் உறுதிப்படுத்த அந்த பெண்களை மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், அந்த பெண்கள் எவரும் பரிசோதனைக்கு வரவில்லை.
இந்த நிலையில் கருத்தடை சத்திர சிகிச்சைக்கு உள்ளடக்கப்பட்டதாக முறைப்பாடு செய்த பெண்களில் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார். இந்த பெண் மருத்துவப் பரிசோதனை மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது சம்பந்தமான பரிசோதனை அறிக்கைகளின் பிரதிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் ரதன தேரர் ஆகியோர் இந்த பெண்கள் கருத்தடை சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரென அடித்து கூறி வந்ததுடன், அதனை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனை அவசியமில்லை எனவும் வாதிட்டனர்.
இந்த நிலையில், ஜயசுமண மற்றும் ரதன தேரர் உள்ளிட்டோர் இந்த இனவாத நாடகத்தை எதற்காக அரங்கேற்றினர் என்பது தொடர்பான விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.