பிரதான இனத்தின் ஆசீர்வாதம் இன்றி உலகில் எந்தநாடும் முன்னேறியதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அனுராதபுரம் மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். நாங்கள் சரியான அணியில் இணைந்திருக்கின்றோம். நாட்டின் பக்கம் நாங்கள் நிற்கின்றோம். பிரதான இனத்தின் ஆசீர்வாதம் இன்றி, பிரதான இனத்தின் விருப்பமின்றி எந்த நாடும் முன்னேறியதில்லை.
நாட்டில் வாழும் 74 வீதமான சிங்கள மக்கள் கோத்தபாய ராஜபக்சவையே விரும்புகின்றனர். அப்படியானால் முஸ்லிம்கள் பிரிந்து தனியாக வாழ வேண்டுமா?. அல்லது அனைத்து இனத்தவருடனும் இணைந்து சகோதரத்துவத்துடன் ஒன்றாக நாட்டை முன்னேற்றி பிரதிபலன்களை பெற வேண்டுமா?. இதற்காகவே நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம் என அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.