கணித பாட ஆசிரியர் உடலுறவு பற்றி அடிக்கடி பாடம் நடாத்துவதாக மாணவிகள் குற்றச்சாட்டு.
தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியாக பணியாற்றும் சுரேஷ் என்பவர், மாணவியருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மாணவியர் புகாரளித்துள்ளனர். பலமுறை அவர் மீது புகாரளிக்கப்பட்டும் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மாணவியரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் சுரேஷ் மீது பாதிக்கப்ப்டட மாணவியரே புகாரளித்துள்ளனர். ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒரு அரசுப் பள்ளி உள்ளது. இங்கு ஒடுவன்குறிச்சியைச் சேர்ந்த 37 வயதான சுரேஷ் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதங்களாக இவர் 8ம் வகுப்பு படிக்கும் மாணவியரிடம் தகாத முறையில் பேசுவதாகவும், நடந்து கொள்வதாகவும் பாலியல் ரீதியில் தொல்லை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஏற்கனவே 2 முறை புகாரளித்துள்ளனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சமீபத்தில் 3 மாணவியரின் பெற்றோர், ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவனிடம் புகாரளித்துள்ளனர்.
அவரது அறிவுறுத்தலின்படி நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர், ஆசிரியர் சுரேஷிடம் விசாரணை நடத்தியுள்ளார். மேலும் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்தும் மாணவியரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு மட்டுமின்றி சுரேஷ் மீது திருட்டுக் குற்றச்சாட்டும் ஏற்கனவே உள்ளது. பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 2 லேப்டாப்புகள் திருடப்பட்ட வழக்கில் அவர் மீது சந்தேகம் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், தன் மீது குற்றம் சாட்டுவோரை மிரட்டி ஒடுக்கும் வேலையிலும் சுரேஷ் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது
புகார், விசாரணை என ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க மற்றொரு பக்கம், ஆசிரியர் சுரேஷ் தனது மனைவியை அனுப்பி பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகாரை வாபஸ் பெற வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் கேட்க ஆசிரியர் சுரேஷின் செல்போன் எண்ணுக்கு நமது செய்தியாளர் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இதுபோன்று பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட்டால், பணியிடை நீக்கம் மட்டுமே தண்டனையாக முடிந்து விடுகிறது. அவர்கள் வேறொரு பள்ளிக்கு சென்று மீண்டும் தங்கள் அட்டூழியத்தை தொடர்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றச்செயல்கள் குறையும்.