ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்காக எத்தனை கோடிகள் செலவு செய்துள்ளார்கள் தெரியுமா..??
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி இயக்கம் ஆகியவை உள்ளடங்கலாக ஐந்து கட்சிகளை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சுமார் 132 கோடி 20 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க வார தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் கோத்தாபாய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இது வரையான காலப்பகுதியில் சுமார் 78 கோடி 40 இலட்சம் ரூபாவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்காக 49 கோடி 60 இலட்சம் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி இயக்கம் இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சுமார் 3 கோடி 50 இலட்சம் ரூபாவினை செலவிட்டுள்ளது.
அச்சுஊடகம், ஒளிபரப்பு ஊடகம் , சமூக ஊடக மற்றும் ஏனைய செலவுகளை மையமாக கொண்டே இந்த அமைப்பு தேர்தல் பிரச்சாரத்தின் போதான செலவினை கணித்துள்ளது.
பொதுஜன பெரமுன மற்றும் புதிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் ஒளிபரப்பு ஊடகங்களுக்காகவே அதிகளவு செலவிட்டுள்ளன.
அந்த வகையில் பொதுஜன பெரமுன ஒளிபரப்பு ஊடகத்திற்காக சுமார் 63 கோடி 40 இலட்சம் ரூபாவினை செலவிட்டுள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணி 27 கோடி 80 ரூபாவினையும் செலவிட்டுள்ளது. இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியே ஒளிபரப்பு ஊடகங்களுக்காக அதிகளவிலான நிதியை செலவிட்டுள்ளமை தரவுகளின் படி உறுதியாகியுள்ளது.அத்துடன் , ஜே.வி.பி யினர் ஒளிபரப்பு ஊடகங்களுக்காக சுமார் 2கோடி 10 இலட்சம் ரூபாவினை செலவிட்டுள்ளனர்.
அச்சு ஊடகங்களினூடான பிரச்சார நடவடிக்கைகளுக்காக புதிய ஜனநாயக முன்னணி 10 கோடி 50 இலட்சம் ரூபாவினை செலவிட்டிருப்பதுடன், பொதுஜன பெரமுன 5கோடி 60 இலட்சம் ரூபாவினை செலவிட்டுள்ளது.
அந்த வகையில் புதிய ஐனநாயக முன்னணியே அச்சுஊடகங்களிலுடான தேர்தல் பிரச்சாரங்களுக்காக அதிகளவில் செலவிட்டுள்ளது.ஜே.வி.பி அதற்காக 1கோடி ரூபாவினை மாத்திரமே செலவிட்டுள்ளது.
இதன் படி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க மற்றும் பட்டாரமுல்லே சீலரத்ன தேரர் ஆகியோர் சுமார் 70 இலட்சம் ரூபாவினை அனைத்து பிரச்சார நடவடிக்கைகளுக்குமாக செலவிட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் ஏனைய வேட்பாளர்கள் மிகவும் சிறியளவிலான தொகையை யே தேர்தல் பிரசாரத்திற்காக செலவு செய்துள்ளனர். இந்நிலையில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுடைய பிரசார செலவும் சுமார் 100 கோடி ருபாவினை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.