எம்.எம்.எம்.நூறுல் ஹக்
சாய்ந்தமருது – 05
(கடந்த 02.11.2019 நாளிதழில் அரசியல் தீப்பொறி பகுதியில் இடம்பெற்ற ஒரு கட்டுரைக்கான எதிர்வினையாக எழுதப்பட்ட கட்டுரையே இதுவாகும்)
கடந்த 02.11.2019 வீரகேசரி நாளிதழில் 'அரசியல் தீப்பொறி' பகுதியில் 'வாட்பொறை மாட்சியும் உடைவாளின் சரணாகதியும்' என்ற தலைப்பில் நண்பர் 'கங்கத்தியப்பா' எழுதிய கட்டுரை இடம்பெற்றிருந்தது நாம் அறிந்ததே. அதில் பல்வேறு அரசியல் விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தாலும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கை தொடர்பில் அவ்வூர் மக்கள் எடுத்திருக்கும் தீர்மாணத்தை கேள்விக்குட்படுத்தியிருப்பது குறித்து மட்டுமே எனது அவதானம் இங்கு பதிவு செய்யப்படுகின்றது.
எதிர்வரும் 16.11.2019 இல் நடைபெறவிருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8ஆவது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து நிற்பது மிகவும் பகிரங்கமானது. அக்கட்சியினர் எவரையும் தேர்தலில் ஆதரித்து நிற்க முடியும். இது ஜனநாயகத்தின் மீதான அவர்களது உரிமையாகும். இதற்கு நேர் எதிரான வேட்பாளராக கருதப்படும் மஹிந்த அணியிலுள்ள கோத்தாபயவை 'சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்கள்' ஆதரிப்பதாக அண்மையில் பகிரங்க மேடையில் அறிவிப்பு செய்திருந்தனர். இது அவர்களின் ஜனநாயக உரிமை என்று ஏற்றுக்கொள்ளாது விமர்சிக்க தொடங்கியிருப்பதுதான் மிக ஆச்சரியமாக இருக்கின்றது.
இதற்கு நல்லதொரு உதாரணமாக கடந்த 2018.02.08 நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட சாய்ந்தமருது மக்கள் தமது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை ஆதரித்து பெருவாரியாகவும் ஏனையோர்கள் மாற்றுக் கட்சிகளையும் ஆதரித்துக் கொண்டமை ஆகும். ஆகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று ஆதரிப்பதும் இலங்கை முஸ்லிம்களில் பெரும்பகுதியினர்கள் ஆதரிப்பதற்கு தயாராகியிருப்பதும் சஜித் பிரேமதாசவே என்பது மிகவும் வெளிப்படையானது. இதன் மறுதலை குறித்த ஒரு முஸ்லிம் பகுதியினர் மாற்று வேட்பாளர்களை ஆதரித்துக்கொள்வதற்கு கரிசனை கொண்டிருக்கின்றனர் என்பதையே காட்டும்.
இந்நிலைக்கு பிரதான காரணங்கள் அவரவர் பகுதிகளில் காணப்படுகின்ற அரசியல் சூழ்நிலை, சமூகத் தேவைப்பாடு போன்றவற்றின் வெளிப்பாடாகும். இந்த நியதியின் அடிப்படையில் சாய்ந்தமருது மக்களின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பாக கைக்கொண்டொழுகும் 'சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்கள்' தமது கோரிக்கையை நிறைவு செய்வதற்கு ஒரு வாய்ப்பாக கோத்தாவை ஆதரிப்பதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதனை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது முறையல்ல. அதுமாத்திரமன்றி கோத்தபாய ஜனாதிபதியாக ஆகக்கூடும் என்கின்ற ஒரு கணிப்பும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இந்நிலையில் இம்மக்கள் அவரை நோக்கி வாக்களிப்பது என்பது யாருடைய வெற்றியையும் தடுப்பதில் தாக்கம் செலுத்தக் கூடிய வாக்குத் தொகையாக இராது என்பதும் தெளிவான ஒன்று.
கடந்த 1988களில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொண்ட எந்தத் தேர்தலானாலும் அந்தத் தேர்தலில் அக்கட்சியையும் அக்கட்சி யாருக்கு வாக்களிக்க பணிக்கின்றதோ அந்த தரப்பையும் சாய்ந்தமருது மக்கள் அளிக்கின்ற மொத்த வாக்குகளில் 80வீதமான வாக்குகளை அளித்து வந்திருக்கின்ற வரலாறு தொடர்ந்திருப்பதை அனைத்து தேர்தல் புள்ளிவிபரங்களும் நிரூபிக்கும். இதற்கு மாறாக கடந்த 2018இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இம்மக்கள் மாறி வாக்களிக்கும் முடிவினை எடுத்து தமது கோரிக்கையின் நியாயத்தை வலுப்படுத்தியிருந்தனர். அதனால்தான் நண்பர் கங்கத்தியப்பா கட்டுரை எழுதும்போதும் அதன் பிற்பாடு சாய்ந்தமருதில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த சஜித்தை ஆதரிக்கும் கூட்டத்திலும் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இம்மக்களின் ஆணையைத் தான் மதிப்பதாக ஒப்புக் கொண்டிருக்கின்றார்.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை வழங்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த மூன்று நான்கு வருடங்களுக்கு உட்பட்ட காலத்தினுள் வெளிப்படுத்தியிருந்த போதிலும் அதனை வழங்குவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்த நிலையிலும் தட்டிக்கழித்து வந்திருப்பதை மனச்சாட்சியோடு சிந்திப்பார்களானால் மறுக்க மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை. அப்படி இருந்தும் அவற்றினை வழங்காது ஏமாற்றி வந்ததன் விளைவே கடந்த 2018 உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாகும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 'முஸ்லிம் காங்கிரஸை இவ்வூரில் இருந்து முற்றாக அழிக்க வேண்டும் என்ற எண்ணமுடையோருக்கு வாய்ப்பளித்திருக்கின்றது' என்று நண்பர் கங்கத்தியப்பா ஆதங்கம் தெரிவித்துள்ளார். அப்படியானால் இந்த சூழலுக்கான இடைவெளியை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் யார்? அது முஸ்லிம் காங்கிரஸினுடைய காலம் கடத்தும் போக்குத்தானே?
ஆயினும் கடந்த 2000ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இக்கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற ரஊப் ஹக்கீம் மிக குறுகிய காலம் 2001,2008,2009,2010 ஆகிய ஆண்டுகள் தவிர்ந்த ஏனைய இற்றைவரையான 19 ஆண்டுகளில் 15 ஆண்டுகளை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே முன்னெடுத்து வந்திருக்கின்றார். ஆகவே அஷ்ரப்போடு ஹனிபாவுக்கு ஒட்டிக்கொள்ள முரண்பாடுகள் இருந்தாலும் அமைச்சர் ரஊப் ஹக்கீமோடு இணங்கிப் போவதில் முரண்பாடுகள் இருப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. இதனால்தான் அவர் ஜும்மா பள்ளிவாசலின் தலைவராக வந்த 2011 தொடக்கம் 2018 முற்பகுதிவரை அமைச்சர் றஊப் ஹக்கீமுடன் நெருங்கிய உறவோடு இருந்தார்.
இந்நிலையில் கடந்த 1987களில் இருந்து சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தபோதிலும் 2008இல் அது முனைப்புக்கொண்டு வேறொரு வடிவத்தில் வேகமெடுக்கத் தொடங்கிய சந்தர்ப்பத்தில், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றமும் ஏனைய சில அமைப்புக்களும் இணைந்து இப்போராட்டத்துக்கான அழுத்தங்களை வலியுறுத்தி வந்தனர். அந்த சூழலில் 2010இல் அமைச்சர் அதாவுல்லாஹ் உள்ளூராட்சி, மாகாண சபை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலத்திலும் கூட இவ்வமைப்பினர்கள் பள்ளிவாசலை அழைத்தும் தலைவர் ஹனிபா அதற்கு இணக்கம் தெரிவிக்காத ஒரு நிலையினையே நாங்கள் அவதானிக்கின்றோம். இவரது பதவியேற்புக்கு முன்னர் இருந்த தலைவர் சட்டத்தரணி அஸீஸ் இவ்வணியினரின் வற்புறுத்தலின் பெயரில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கைக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்கின்ற ஒரு கடிதத்தை வழங்கியதோடு அவர்கள் இக்கோரிக்கையின் பின்னால் வருவதற்கு எப்போதும் தயக்கம் காட்டியே வந்திருக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக 2017இன் பிற்பகுதிகளில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையானது முன்னர் அதிக ஈடுபாடு காட்டிய மறுமலர்ச்சி மன்றத்துக்கு அப்பாலும் விரிவுபடுத்தப்பட்டு பல புதிய அணியினர்களும் முன்னெடுத்து ஜும்மா பள்ளிவாசலையும் இதற்கு இசைவாக செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுத்தனர். அந்த நிலையிலும் கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால்தான் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் வழங்கப்பட முடியும் என்ற அடிப்படையில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததே அன்றி ஹனீபா மாற்றுக்கட்சியின்பால் இக்கோரிக்கையினை அடைவதற்கு நகராதவராகவே காணப்பட்டார்.
ஆனால் நண்பர் கங்கத்தியப்பா உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற குழுவினரை மாநகர முதல்வராக பொறுப்பெடுக்குமாறு கேட்டதை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நிர்த்தாட்சண்யமாக மறுத்தனர் எனவும் இது இம்மக்களின் வேட்கை அல்ல என்ற கொள்கை ரீதியான முலாமும் பூசப்பட்டது எனவும் அவர் வர்ணிக்கத் தவறவில்லை. உண்மையில் அது வெறுமனே மறுக்கப்பட்ட ஒன்றாகவும் அதற்கு கொள்கை முலாம் பூசப்பட்டது என்பதும் அப்பட்டமான அபத்தமாகும்.
ஏனெனில் கடந்த 2012இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக இருந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராஸாஹிப் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று முதல்வரான நிலையிலும் அவர் அச்சபையின் முழு காலத்துக்குமான முதல்வராக கடமையாற்ற விடாது முஸ்லிம் காங்கிரஸே அப்பதவியை பறித்துக்கொண்ட வரலாற்றினையும் முழு நாடும் அறியும். இதனை நண்பர் கங்கத்தியப்பா மறந்துதான் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறாரா என்ற கேள்வியினை ஏற்படுத்தி நிற்கின்றது.
இவ்வாறு பல்வேறுபட்ட அவதூறுகளையும் அபத்தங்களையும் 'சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்கள்' மீது நண்பர் கங்கத்தியப்பா சுமத்தியிருப்பது வேதனையளிக்கின்றது. உண்மையில் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கக்கூடிய கட்சியாக இருந்தும் அதனை இன்றுவரை வழங்காது இழுத்தடித்துக் கொண்டிருப்பதற்கு அண்மையில் ஏற்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணைதான் காரணம் என்பது போன்று அண்மையில் சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையாளர்கள் இதுகாலவரை வெளிப்படுத்தி வந்திருக்கின்ற ஒரு விடயத்தை ஏற்பதற்கு அமைச்சர் ஹக்கீம் விரும்பினாலும் அவரது கட்சிக்குள் இருக்கின்ற வேறு சிலரின் பிடிவாதங்களினால் இதனை செய்யாது காலம் கடத்துகிறாரா என்ற ஒரு கேள்வி எமக்குள் இருந்தாலும் இதன் முதல் தடை காரணியாக இருப்பதில் முன்னுரிமை பெறுவது பின்வரும் நிலப்பாடுகள்தான் என்பது துல்லியமானது.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்த்தலானாலும் சரி அதற்கு பின்னர் எழும் அவர்களின் தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையானாலும் சரி அதற்கு வகுக்கப்பட வேண்டிய எல்லைகள் என்பது சாய்ந்தமருதோடு தொடர்புபட்டிருக்கவில்லை. சாய்ந்தமருதுக்கு சபை வழங்காத நிலையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கான எல்லை என்பதோ பின்னர் உருவாக்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத்துக்கோ எல்லைகளை அடையாளப்படுத்துகின்ற போதோ முஸ்லிம் அரசியலில் பலவீனங்கள் இருக்குமேயானால் சில வேளை சாய்ந்தமருதும் கல்முனைக்குடி – கல்முனை முஸ்லிம் சமூகமும் ஒரு சபையின் கீழ் வரக்கூடிய ஒரு நிர்ப்பந்தத்தினையும் ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில் இருந்து விடுதலை பெறுவதற்கும் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை முதலில் வழங்குவது உபயோகமாக அமைய முடியும் என்கின்ற எடுகோலை சட்டென புறந்தள்ள முடியாது.
இவற்றுக்கு அப்பால் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்த்தல், அதன் பின்னர் அதற்கு உள்ளூராட்சி மன்றம் ஒன்றை உருவாக்குவது போன்ற எந்த நிலையிலும் எல்லை நிர்ணயங்களில் வரக்கூடிய சர்ச்சை என்பது கல்முனை வடக்கில்தான் இருக்கின்றது என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியும். ஆகவே அப்பிரச்சனையோடு சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை முடிச்சுப் போடுவது ஒரு இடியப்பச் சிக்கலாகவும் அவிழ்க்கப்பட முடியாத முடிச்சாகவுமே மாறி தொடர் கதையாகிப்போகும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை முஸ்லிம்களில் பெரும்பகுதியினரும் அம்மக்களுக்குள் அதிக செல்வாக்குடைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் நம்புகின்ற சஜித்தின் வெற்றி நிகழாமல் போனால், சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையினை சாத்தியப்படுத்தி தரக்கூடிய சந்தர்ப்பம் கோத்தாவின் கைகளுக்கு கைமாறிவிடும். இதனை அடைந்து கொள்வதற்காக சாய்ந்தமருது மக்கள் எத்தணிப்பது எவ்வகையில் பிழையாகும் என்பதை நண்பர் கங்கத்தியப்பா விளக்காது விட்டிருப்பது ஏன்?
அவர் நம்புவதுபோன்று சஜித்தின் ஆட்சி அமையுமானால் ஏலவே முஸ்லிம் காங்கிரஸுக்காக சாய்ந்தமருது மக்கள் அளித்துவந்த தொடர்ச்சியான வாக்குகளையும் கவனத்தில் எடுத்து அக்கட்சி வழங்கிய வாக்குறுதிகள் என்பவற்றின் தார்மீக அடிப்படையிலும் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் கிடைப்பதில் தடை இருக்காது என்பதையும் நண்பர் கங்கத்தியப்பா ஏற்பார் என்பதே எனது நம்பிக்கை.