காரைதீவு பிரதேசத்தில் விடுமுறைகாலத்தில் பிரத்தியேக வகுப்புகளை நடாத்தவேண்டாமென்று தவிசாளர் கே.ஜெயசிறில் விடுத்த உத்தரவைமீறி டியுசன் நடாத்திய நிலையங்களுக்கு சம்மாந்துறைப் பொலிசார் திடீர் பாய்ச்சலை நடாத்தியுள்ளனர்.
தொடரும் மழை மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளையேற்று விடுமுறைகாலத்தில் பிரத்தியேக வகுப்புகளை தடைசெய்யுமாறு டியுசன் ஆசிரியர்களிடமும் நிலையங்களிடமும் எழுத்துமூல அறிவித்தல் தவிசாளரால் விடுக்கப்பட்டிருந்தது.
தவிசாளரின் முறைப்பாட்டையடுத்து பொலிசார் நேற்று முன்தினம் குறித்த ரியுசன் நிலையங்களுக்குச்சென்று விசாரணை நடாத்தியதோடு அவர்களது வாக்குமூலங்களையும் பெற்றுள்ளனர்.
குறித்த ஆசிரியர்கள் தொடர்பாக வலயக்கல்விப் பணிமனையில் தெரிவிக்கவிருப்பதாகவும் பொலிசார் கூறிச்சென்றுள்ளனர். அவர்கள் அத்தோடு ரியுசன் வகுப்புகளை மூடியுள்ளதாகத் தெரிகிறது.
மக்களுக்காகவே மக்களின் வேண்டுகோளையேற்று தான் இப்படியான முற்போக்கான செயற்பாடுகளில் ஈடுபடும்போது ஆசிரியர்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று தவிசாளர் கே.ஜெயசிறில் கூறினார்.
(சகாதேவராஜா - காரைதீவு குறூப் நிருபர்)