Ads Area

பழமையான நோய்களும் புதுமையான மருந்துகளும்.

வாட்டுக்கு வருகின்ற போது, வாட் முழுவதும் மக்கள் அல்லோல்லகல்லப் பட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் வாட்டை விட்டு வெளியேறுவதற்காக தங்கள் பிள்ளைகளை டிஸ்சார்ஜ் பண்ணுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். தாதியர்களும் முகத்தை சுழித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு கதைத்துக் கொண்டிருக்கும் போதே தாங்க முடியாத துர் நாற்றம் மூக்கைத் துளைத்து மூளை வழியாக உறுத்திக் கொண்டிருந்தது. இது ஏதோ பெரும் பிரச்சினையாய்த் தான் இருக்கும் என்று மனம் சொன்னது. துர் நாற்றம் வந்த திசை நோக்கிப் பார்த்த போது; ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க தாய் - ஒரு 3 வயது குழந்தையை கையில் ஏந்தியவாறு அழுது கொண்டிருந்தார். அந்த குழந்தையின் உடல் முழுக்க புண்கள். புண்களிலிருந்து சீழ் வடிந்து கொண்டிருந்தது. ஒரு சத காசு அளவுக்கு கூட இடம் விடமால், அன்று தான் உழுத வயல் நிலம் போல உடல் முழுதும் திட்டுத் திட்டாய் அழுகியிருந்தது. இதற்கும் மேலாக தாங்க முடியாத காய்ச்சல் காரணமாக அந்த குழந்தையின் பிஞ்சு உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. இருமல் வேறு மூச்செடுக்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. கிட்டவே நெருங்க முடியாத அளவுக்கு துர்வாடை அந்த குழந்தையிலிருந்து வீசிக்கொண்டிருந்தது. இது தான் அமைதியாய் இருந்த அவுஸ்தேரியாவில் காட்டுத் தீ பரவியது போல் வாட்டிலே இவ்வளவு கபளோகரமும் ஏற்படுவதற்கான ஒற்றைக் காரணமாக இருந்தது. இந்த குழந்தையைக் கண்டதும் எல்லா தாய்மார்களும் தங்கள் வீடு போக வேண்டும் என்று அடம் பிடிக்கத் தொடங்கி இருந்தார்கள். தாய்மார்கள் தாதியர்களோடு முறுகிக் கொண்டும், தாதியர்கள் வைத்தியர்களோடு முகத்தை சுழித்து கொண்டும் இருந்தார்கள். அந்த நிமிடம் எல்லோருடைய பிரார்த்தனையும் இப்படி ஒரு நோய் தங்களுக்கோ, தங்கள் குழந்தைகளுக்கோ வந்துவிடக்கூடாது என்பதாகவே இருந்தது. 

இது நிற்க!

இப்படித்தான் கிறிஸ்துவுக்கு முற்பட்ட முன்னொரு காலத்திலே ஒரு பெரும் மனிதர் வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் பெரும் செல்வராகவும், அழகராகவும் இருந்தார். அவருக்கும் இப்படி ஒரு தோல் நோய் வந்தது. உடம்பு முழுக்க புண்கள் உருவாகின. அதில் இருந்து புழுக்கள் துடித்து வெளியேறிக் கொண்டிருந்தன. அவைகளை அவர் விரல்களால் எடுத்து தூர எறிந்து கொண்டிருந்தார். தாங்க முடியாத துர்வாடையினால் மக்களெல்லாம் அவரை விட்டு விரண்டோடினர். அவருடைய செல்வமெல்லாம் செலவழிந்து கடைசியிலே ஓட்டாண்டியாக மாறினார். முழு ஊரும் அவரை விட்டு விலகியது. ஊரின் ஒதுக்குப் புறத்தில் போய் தஞ்சம் அடைந்தார். இருந்தாலும் அவரது மனைவி மாத்திரமே கடைசிவரை அவருக்கு உதவியாக ஒத்தாசை புரிந்து கொண்டிருந்தார். தீராத புண்கள், சீழ் வடியும் தேகம், தாங்க முடியாத துர் வாடை, விரல்கள் கண் முன்னாலே அழுகி கழன்று விழும் நிலை. எழுதும் போதும், படிக்கும் போதும் கண்ணீர் வருகின்ற ஒரு காவியம். பொறுமைக்கு இலக்கணமாய், துயருக்கு உதாரணமாய் சொல்லப்படும் இந்தக் கதை நீங்கள் கூட அறிந்த கதையாக இருக்கலாம். 

வேதாகமத்திலும், திருக்குர்ஆனிய விளக்கவுரைகளிலும் சொல்லப்படுகின்ற இந்த கதை நபி அய்யூப்(Job) அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சொந்தக் கதை. சோகக்கதை. இதனால் தான் இந்த நோயின் பெயர் கூட அவருடைய பெயரிலேயே அறியப்படுகிறது. இதுதான் Job Syndrome. ஆனால் இப்போது இந்த நோய் எதனால் வருகிறது? எப்படி புண்கள் உருவாகின்றது? அதற்கு காரணமான நோய்க்கிருமி எது? இதற்குரிய வைத்தியம் என்ன? எது எப்படி பரம்பரை மூலம் கடத்தப்படுகிறது? என்று அக்கு வேறு ஆணி வேறாக எல்லாமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அதன் பெயர் கூட Hyper IgE Syndrome என்று மாற்றப்பட்டிருக்கிறது.



ஒருவார கால சிகிச்சையின் பின்னர், உடலில் உள்ள புண்களெல்லாம் ஆறிய நிலையில், சின்னச் சின்ன தழும்புகளோடு அந்தக் குழந்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர் சிகிச்சை மூலமும், தொடர் வைத்திய பராமரிப்பு மூலமும் இப்போது இந்த நோய் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து கிளினிக் வந்த அந்த பையன் இந்த வருடம் பாடசாலைக்கு சேர்க்கப்பட்டிருப்பதாக நேற்றிரவு கோல் எடுத்து தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார் அந்த அம்மா. இது தான் நவீன மருத்துவம் செய்து காட்டிய சாதனை.

ஒரு எட்டு வயது பையன் தனது முகத்தில் ஒரு வெள்ளைப் புள்ளி கொஞ்சக் காலமாக வளர்ந்து வருவதாக கிளினிக்குக்கு கொண்டு வரப்படுகிறான். எவ்வளோவோ தரம் பலரிடம் மருந்து எடுத்தும் சுகப்படுவதாத இல்லை என்று அவனது தாய் அலுத்துக் கொண்டாள். புது வகுப்புக்கு குறைவாகவே பிள்ளைகள் வந்த ரியுசன் மாஸ்டரின் முகம் போல அவளது முகமும் உறைந்து போய், சோகம் இழையோடி இருந்தது. அந்த சிறுவனைப் பரிசோதித்த போது; அவனது வெள்ளைப் புள்ளி- தொடுகை உணர்ச்சி இல்லாமல் (Loss of Touch Sensation) இருந்தது. இன்னும் கொஞ்சம் ஊன்றிக் கவனித்த போது அவனது மூக்கு நுனியும், காது மடல்களும் தடிப்படைந்திருப்பது தெரிந்தது. அவனது தாயை பரிசோதித்தபோது அதே போன்றதொரு நிலை அவளிடமும் இருந்தது. அவளது கைகளும் கூட மரத்துப் போய் இருந்தது. இது லெப்ரசி (Leprosy) எனப்படும் தொழு நோயின் ஆரம்ப நிலை என்பது சீனியர் டெர்மடொலஜிஸ்ட் மூலமாகவும் ஊர்ஜிதமானது.


ஊரெல்லாம் இவ்வாறான தொழு நோயாளிகளை ஊர் ஒதுக்கி வேடிக்கை பார்த்த சம்பவங்கள், சிறுவர்களை விட்டு கல் எறிந்து துரத்திய சம்பவங்கள், கடவுளின் சாபம் என்றும், குணப்படுத்த முடியாத தொற்று நோய் என்றும் இவ்வாறான நோயாளிகளை கொலை செய்து, உடலை எரித்து சாம்பலைக் கூட கண் காணாத இடத்தில் புதைத்த சம்பவங்கள் ஏராளமாக வரலாற்று கதைகளில், இதிகாசங்களில் விரவிக் கிடக்கின்றன. ஈசா அலைஹிஸ்ஸலாம் (ஜீசஸ்) தொழு நோயாளிகளை அரவணைத்து, அவர்களை இறை அருளால் குணப்படுத்திய சாகசங்களை கூட வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. வரலாறு தொடங்கிய காலம் தொட்டு இந்த லெப்ரசி நோய் மக்கள் மன்றில் புறக்கணிக்கப்பட்ட ஒரு பயங்கர நோயாகவே இருந்து வந்திருக்கிறது என்பதை 1550 BCE க்கு முந்தைய எகிப்திய Ebors Papyrus இன் ஆதி கால குறிப்புகளில் கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அவ்வளவு பழமையானதொரு நோய்.‌ ஏன்! நமது நாட்டில் கூட இந்த லெப்ரசி நோயாளிகளை தனிமைப்படுத்தி சிறை வைப்பதற்காக மாந்தீவு எனும் தனித்தீவு ஒன்றும், அதிலே ஒரு வைத்தியசாலையும் அண்மைக்காலம் வரை இருந்ததும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி தான் .


உடல் முழுக்க திட்டுத்திட்டாய் புண்கள் தோன்றி, கை விரல்கள் எல்லாம் இத்துப்போய், கழன்று விழுந்து, முகம் அகோரமாகி, கண்கள் குருடாக்கி,பார்ப்பதற்கே பயம் வரும் அளவுக்கு தோற்றம் மாற்றமடைந்து, கை கால் மூட்டுகள் விரிக்க முடியாமல் சொத்தியாகிப் போகும் ஒரு நோய் தான் இந்த லெப்ரசி.. இப்படித்தான் வரலாறு அந்த நோயாளிகளை கட்டமைத்து வைத்திருக்கிறது. அது போல சமூகமும் அவர்களை புறக்கணித்து வைத்திருக்கிறது. ஆனால் இன்று நவீன மருத்துவத்தின் வளர்ச்சியினால் , சுகாதார முன்னேற்றத்தினால் வரலாறு காண்பித்த, திரைப்படங்களில் பார்த்த, இதிகாசங்களில் விவரிக்கப்பட்ட லெப்ரசி(தொழு) நோயாளிகள் போல் யாரையும் நாம் இப்போது காண்பது கிடையாது. இதற்கு காரணம் இந்த நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.‌ இந்த நோய் எதனால் ஏற்படுகிறது? இந்த நோய்க் கிருமி எப்படி வளர்கிறது? வளர்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கிறது? எப்படி தொற்றுகிறது? எந்த மருந்து இந்த நோயை அழித்தொழிக்கிறது? இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் மருத்துவ வளர்ச்சியினால் கண்டறியப்பட்டிருக்கிறது. (Novartis Pharmaceuticals எனும் மருந்துக் கம்பெனி(மருத்துவ மாஃபியா தான் 😛) தான் கடந்த 30 வருடங்களாக இந்த மருந்தை உலகம் முழுவதும் இலவசமாக வழங்கி வருகிறது என்பது மேலதிக தகவல்). என்னதான் லெப்ரசி பற்றி மருத்துவம் அறிந்திருந்தாலும் தெரிந்திருந்தாலும், இந்த லெப்ரசி நோய் பற்றிய பயம் ஒவ்வொரு மனித மனத்திலும் இன்றும் அப்படியே தான் இருக்கிறது.


இப்போது, அந்தத் தாயும் மகனும் ஒன்பது மாத சிகிச்சையின் பின் சாதாரண மனிதர்களாக சமூகத்திலே உலாவிக் கொண்டிருக்கிறார்கள். தாய் வீட்டு வேலைகள் செய்து ஜீவனோபாயத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். மகன் பாடசாலைக்கு போய்க் கொண்டிருக்கிறான்... இதுதான் நவீன மருத்துவம் செய்த சாதனை.



இன்னுமொரு எட்டு வயது பையன் அடிக்கடி இருமல், மூச்சிளைப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்து கொண்டிருந்தான். அவனது உடல் இழைத்துப்போயிருந்தது, உடல் நிறை குறைந்து கொண்டு வருவது அவனது க்குறோத் சாட்டிலே தெளிவாகத் தெரிந்தது. மேலதிக பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நெஞ்சு எக்ஸ்ரேயில் சின்னதொரு தண்ணீர் கட்டி இருப்பது போல் தெரிந்தது.‌ அந்த தண்ணீர் கட்டியில் சளி நிரம்பியிருந்தது. அந்த தண்ணீர் கட்டியை ஊசியால் குத்தி அதிலிருந்த அந்த சளி நீரை பரிசோதனைக்காக அனுப்பியபோது அவனுக்கு Tuberculosis/TB(சயரோகம்) இருந்ததாக முடிவாகியது. இந்த நோய் இவனுக்கு எப்படி தொற்றியது என்பதை தேடிய போது; அதற்காக அவனது குடும்ப அங்கத்தவர்களை பரிசோதித்தபோது; அவனது தாய்க்கும், தந்தைக்கும் கூட இந்த TB இருப்பது தெரிய வந்தது.


வரலாற்றிலே TB என்பது மிகக் கொடூரமான நோய். உடல் மெலிந்து எலும்பும் தோலுமாகி, எலும்புக்கூடுகள் உடைந்து, உணவு உண்ண முடியாமல் நோய்வாய்ப்பட்டு , ஊர் ஒதுக்கி வைக்கப்பட்டு கடைசியில் தெரு மிருகம் போல தட்டழிந்து செத்துப் போகின்ற ஒரு நோயாகத் தான் இதிகாசங்களும், வரலாறும் இந்த நோயை பதிந்து வைத்திருக்கிறது. ‌இது அந்த அளவுக்கு பழைமையான ஒரு நோய். மனித வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டு இருந்து வருகிற ஒரு நோய் . இஸ்ரவேலில் உள்ள Alit Yam கல்லறைகளில் கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் கூட இந்த நோய் இருந்ததற்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட அந்த எலும்புகள் ஒன்பது ஆயிரம் வருடங்கள் பழமையானவை. இன்னும் சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்ட 5 லட்சம் ஆண்டுகள் பழைமையான சில எலும்புக்கூடுகளிலும் இந்த TB நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வளவு பழமையானதொரு நோய் தான் இந்த TB. இன்று வரை தனது இருப்புக்காக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு நோய்க்கிருமி. மிகவும் பலம் பொருந்திய, நவீன விஞ்ஞானத்திற்கே சவால் விடும் ஒரு நோய் தான் டியுபர்குளோஸிஸ். அதனால் தான் என்னவோ அந்த நோய் பற்றிய ஒரு பயம் எல்லோர் மனதிலும் இன்று வரை இருக்கிறது. ஏனெனில் இந்தப் பயம் வரலாறுகளிலிருந்து சந்ததி சந்ததியாக கடத்தப்பட்ட ஒரு பயமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இன்று TB என்பது குணப்படுத்த முடியுமான ஒரு நோயாக இருக்கிறது.‌ இந்த நோய் எப்படி ஏற்படுகிறது? எப்படி பரவுகிறது? இதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன? தடுப்பு முறைகள் ‌எப்படி ? எல்லாமே விலாவாரியாக நவீன மருத்துவம் மூலம் கண்டறிப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இப்போது அவர்கள் மூவரும்;தாயும், தந்தையும், மகனும் ஆறு மாத தொடர் கண்காணிப்புச் சிகிச்சைகளின் பின் சாதாரண மனிதர்களாக சமூகத்திலே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தந்தை தனது நடைபாதை வியாபாரத்தை செய்துகொண்டிருக்கிறார். தாய் இன்னும் ஒரு குழந்தையை பிரசவிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள். அந்த சின்னப் பையன் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சைக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறான். இதுதான் நவீன மருத்துவம் செய்த சாதனை.



இந்த மூன்று செய்திகளும் ஒரே ஒரு விஷயத்தை நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. மக்கள் எல்லாம் கொடிய நோய்களென்று தூர விலகிய சமூகப் புறக்கணிப்புச் செய்த நோய்கள் எல்லாம் இன்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து கொண்டிருக்கின்றன, சிகிச்சை அளிக்கப்பட்டு சுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இயற்கை வைத்தியம்,ஆயுர்வேதம், யுனானி இப்படி ஏகப்பட்ட மருத்துவமுறைகள் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கை விரித்து குணப்படுத்தவே முடியாது என்று சொல்லப்பட்ட நோய்கள்தானே இவைகளெல்லாம் என்பதை சமூகம் வாஸ்தவமாக மறந்து விட்டிருக்கிறது. இப்படியான பைபிள் காலத்து நோய்கள்/ ஆதி காலத்து நோய்கள் (Ancient / Biblical Diseases) பல இன்று இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நினைத்தாலே எல்லோருக்கும் பயம் தொற்றிக் கொள்கின்ற இவ்வாறான நோய்கள், இலட்சக்கணக்கில் மனிதர்களை பலி கொன்ற தொற்று நோய்கள் இன்றைய காலத்தில் நவீன மருத்துவத்தின் வளர்ச்சியினால் சாதாரண நோய்களாக , கணக்கில் எடுக்கப்படாத நோய்களாக மாறி இருக்கின்றன. அதன் காரணமாக இன்று அந்த நோயாளிகள் தமது ஊரோடும், நமது மக்களோடும் சக மனிதர்களாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார்? அல்லது அவர்களது நோய் எப்படிப்பட்டது என்பது கூட மற்றவர்களுக்கு தெரியாத அளவுக்கு நமது மருத்துவமும், சுகாதாரமும் வளர்ச்சியடைந்திருக்கிறது; அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பெருமையெல்லாம் மனித ஆராய்ச்சிக்கும் விஞ்ஞானத்திற்குமே உரித்தானது. எல்லா புகழும் இறைவனுக்கே.

நவீன மருத்துவ எதிர்ப்பாளர்கள், பழைமை வாதம் பேசுபவர்கள், அடிப்படை அறிவியல் தெரியாமல் மருத்துவ முறைகள் குறித்து கம்பு சுத்துபவர்கள், நவீன டபயடிக் , கிட்னி பெயிலியர் மருத்துவ முறைகள் குறித்து பயம் காட்டுபவர்கள் எல்லோரும் இந்த பழமையான நோய்களுக்கு, ஆதி மனிதோடு பிறந்து வளர்ந்த இந்த நோய்களுக்கு, தமது மூதாதையர்கள் சமூகப் புறக்கணிப்புச் செய்த இந்த நோய்களுக்கு, தங்களிடம் என்ன மருத்துவம் இருக்கிறது என்பதை சொல்லி விட்டு கம்பு சுத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும். கம்பு சுற்றுவதிலும் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும்.

Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவ நிபுணர்
ஆதார வைத்தியசாலை சம்மாந்துறை.


பிற்குறிப்பும் நன்றி நவிலலும்- ஒரு வருடத்துக்கும் மேலாக ட்ராப்டிலே கிடந்த, தலையிலேயே ஓடிக்கொண்டிருந்த இந்த தலைப்பு குறித்து எழுதுவதற்கு நேரமும் டேட்டாவும் தந்த SS Auto Spa விற்கு நன்றிகள். கார் ஸேவிர்ஸ் முடிந்த கையோடு கட்டுரையும் எழுதியாயிற்று.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe