நாடு ஒரு இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர் கொண்டுள்ள கால கட்டத்தில், புலனாய்வுத் துறையின் தலைவராக சுரேஷ் ஸாலேஹ்வை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ நியமித்தமை தவறு என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றமை கவலை தரும் விடயமாகும்.
ஒட்டு மொத்த முஸ்லிம் கட்சிகளும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2010 ஆம் ஆண்டு அன்னம் சின்னத்தில் களத்தில் குதித்த போதும் தற்போதும் அதே ஐக்கிய தேசியக் கூட்டணியில் பங்காளிகளாக இருக்கின்ற யதார்த்தத்தை உணராமலே அல்லது அவர்களின் உணர்வுகளை மதிக்காமலேயே இவ்வாறான கருத்தினை அவர் முன்வைத்திருக்கிறார்.
ஒரு சிறிய குழுவின் தீவிரவாத அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் அந்த சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளையும் பிரதிநிதிகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கச் செய்கின்ற கருத்து வெளியீட்டை அவர் மேற்கொண்டிருக்கின்றமை கண்டிக்கப் பட வேண்டிய விடயமாகும்!
மேற்படி உண்மையை அதிபர் கோதாபய ராஜபக்ஷ உணர்ந்து செயற்படுவதாகவே நாங்களும் நம்புகிறோம், அத்தகைய முதிர்ச்சியின் வெளிப்பாடாகவே புலனாய்வுத் துறை நிபுணத்துவமிக்க அதிகாரி சுரேஷ் ஸாலேஹ்வை இனமத வேறுபாடுகளைப் பார்க்காது அந்த துறைக்கு பொறுப்பாக நியமித்துள்ளார்.